CRIME
குடிபோதையில் செய்த விபரீதச் செயல்.. இரும்புக் கேட்டில் கை சிக்கி அதிகாலையில் அலறித் துடித்த 32 வயது இளைஞர்.. பகீர் சம்பவம்..!!
மதுபோதையில் விடுதியின் இரும்புக் கேட்டைத் தாண்டிக் குதிக்க முயன்ற இளைஞர் ஒருவரின் கையில் கேட்டின் கூர்மையான இரும்புக் கம்பி குத்தியதால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர் வலியால் அலறித் துடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேட்சல் மாவட்டத்தின் ஜீடிமெட்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கிப் பணியாற்றி வரும் மணிகண்டா (32) என்ற இளைஞர், அதிகாலை நேரத்தில் மதுபோதையில் தான் தங்கியிருந்த விடுதியின் கேட்டினைத் தாண்டி உள்ளே செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகக் கைப்பிடி நழுவியதில், கேட்டின் மேல் பகுதியில் இருந்த கூர்மையான இரும்புக் கம்பி அவரது கையில் ஆழமாகக் குத்திச் சிக்கிக்கொண்டது.
இதனால் கையை எடுக்க முடியாமல் சுமார் ஒரு மணி நேரமாகக் கடுமையான வலியில் தவித்த மணிகண்டாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வெல்டிங் கட்டர் இயந்திரத்தைப் பயன்படுத்தி இரும்புக் கேட்டின் ஒரு பகுதியைத் துண்டித்தனர். பின்னர், கையில் கேட் கம்பி சிக்கிய நிலையிலேயே மணிகண்டாவை மீட்டுச் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்; மதுபோதையில் செய்த செயலால் இளைஞருக்கு நேர்ந்த இந்த விபரீதம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
