LATEST NEWS
“என் வாழ்க்கையே போச்சு” காது வலிக்கு ஊசி போட்டு கையை இழந்த சோகம்… மருத்துவர்களின் பயங்கர அலட்சியத்தால் கதறும் இளம்பெண்… நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!
பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் மருத்துவ அலட்சியத்தின் உச்சக்கட்டமாக நடந்துள்ள ஒரு கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து, பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 20 வயதான ரேகா என்ற இளம் பெண், தனது காதில் ஏற்பட்ட கடுமையான வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக அங்குள்ள ‘மகாவீர் சுகாதார நிறுவனத்திற்கு’ சென்றுள்ளார்.
அங்கு ரேகாவுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அலட்சியமாகச் செயல்பட்டு தவறான ஊசியைச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் சில நிமிடங்களிலேயே ரேகாவின் கை பச்சை நிறமாக மாறத் தொடங்கியதோடு, தாங்க முடியாத அளவுக்குக் கடுமையான வலியாலும் அவர் துடிதுடித்துள்ளார். இருப்பினும், ஆரம்பத்தில் இதனைப் பெரிய பிரச்சனையாகக் கருதாத மருத்துவர்கள், அவரது வலியைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாகப் பதிலளித்து அனுப்பியுள்ளனர்.
வலி பொறுக்க முடியாமல் ரேகா பல மருத்துவமனைகளுக்குச் சென்று காட்டியுள்ளார். இறுதியாக அவர் ‘மேதாந்தா’ மருத்துவமனைக்குச் சென்றபோது, தவறான சிகிச்சையால் அவரது கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ரேகாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால் அவரது கையைத் துண்டிக்க வேண்டும் என்றும் அங்குள்ள மருத்துவர்கள் திடுக்கிடும் உண்மையைக் கூறியுள்ளனர். வேறு வழியின்றி அவரது சம்மதத்துடன் முழங்கை வரை கை துண்டிக்கப்பட்டது.
சாதாரண காது வலிக்கு மருத்துவமனைக்குச் சென்ற இடத்தில், மருத்துவர்களின் இந்த அலட்சியத்தால் ரேகாவின் கை துண்டிக்கப்பட்டதோடு, அவருக்கு வரவிருந்த திருமண வரனும் நின்றுபோயுள்ளது. “மகாவீர் நிறுவன மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் என் வாழ்க்கையே பாழாகிவிட்டது” என அந்த இளம் பெண் கண்ணீர் விட்டு கதறுவது அனைவரின் நெஞ்சையும் பதற வைத்துள்ளது.
