LATEST NEWS
“மருந்தும், மதுவும் ஒரே கூரையில்” இதுதான் தவெக அரசின் புதிய சுகாதாரக் கொள்கையா..? தவெக ஆட்சியின் நிர்வாகத்தைக் கிண்டலடித்த திமுக..!!
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திடம் டாஸ்மாக் கிடங்குகளைப் பராமரிக்கும் ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டிருப்பது குறித்து, திமுக தனது எக்ஸ் (X) தளப் பதிவின் மூலம் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளது. அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளைக் கொள்முதல் செய்து விநியோகிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட நிறுவனத்திடம், அம்பத்தூர், திருமழிசை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கிடங்குகளைச் சீரமைக்கும் பணிகள் வழங்கப்பட்டிருப்பது வெட்கக்கேடானது என திமுக குறிப்பிட்டுள்ளது.
மருந்துக் கிடங்குகளைப் பாதுகாத்து வந்த தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், இனி டாஸ்மாக் கிடங்குகளின் மேற்கூரை கசிவைச் சரிசெய்தல், தரை ஓடுகள் மாற்றுதல் மற்றும் மழைநீர் வடிகால் சீரமைப்பு போன்ற பணிகளைச் செய்யப் போவது அந்த நிறுவனத்தின் அடிப்படை நோக்கத்தையே சிதைப்பதாக திமுக சாடியுள்ளது. ஏற்கெனவே ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்காகத் தங்கம் கொள்முதல் செய்த அந்த நிறுவனம், தற்போது கட்டுமானத் துறையிலும் கால்பதித்து ‘மருத்துவம் – நகைக்கடை – மதுபானக் கிடங்கு’ என ஆல்-ரவுண்டர் நிறுவனமாக மாறிவிட்டதாக திமுக விமர்சித்துள்ளது.
ஒருபுறம் முதலமைச்சர் விஜய் 108 அவசர உதவி மையத்தில் ஆய்வு செய்து கொண்டிருக்க, மறுபுறம் டாஸ்மாக் கிடங்குகளுக்கு அவசர சீரமைப்புப் பணிகள் வழங்கப்படுவதுதான் தவெக அரசின் புதிய சுகாதாரக் கொள்கையா என திமுக கேள்வி எழுப்பியுள்ளது. தேனியில் அமரர் ஊர்தி கிடைக்காமல் மூதாட்டி உடல் தள்ளுவண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட அவலத்தையும், அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள், படுக்கைகள் மற்றும் ஸ்கேன் இயந்திரப் பற்றாக்குறையையும் சரிசெய்யாமல் டாஸ்மாக்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பது பெரிய நகைமுரண் என அப்பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இறுதியாக, உயிர் காக்கும் மருந்துகளையும் ‘உற்சாகம்’ தரும் மதுபானங்களையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் பாதுகாக்க முயலும் இந்த அரசில், மருத்துவப் பணிகள் கழகம் இனி ‘மதுபானப் பணிகள் கழகமாக’ மாறிவிடுமா என திமுக கேள்வி எழுப்பியுள்ளது. பாராசிட்டமாலும் குவார்ட்டரும் ஒரே கூரையில் இருக்க முடியாது என்றும், மருந்தும் மதுவும் வேறு வேறு என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் திமுக தனது பதிவில் வலியுறுத்தியுள்ளது.
