LATEST NEWS
“நான் யார் தெரியுமா..? 20 வருஷம் MLA தெரியுமா..?” இரவு நேரத்தில் போனில் மிரட்டல் விடுத்த திமுக எம்.எல்.ஏ… ஆட்சியரிடம் பெண் அதிகாரி பரபரப்பு புகார்..!!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வட்டார இயக்குநர் அ.லலிதா புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தான் கடந்த பிப்ரவரி மாதம் பணியேற்றபோது பணி முன்னேற்றத்தில் 37-வது இடத்தில் மிகவும் பின்தங்கியிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை, கடந்த 7 மாதங்களாக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து ஒட்டுமொத்த தரவரிசையில் 8-வது நிலைக்குக் கொண்டு வந்ததாகவும், இதற்காக தலைமைச் செயலாளரால் பாராட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த 6 முதல் 10 வருடங்களுக்கும் மேலாகப் புதுப்பிக்கப்படாமல் இருந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் பதிவுகளை முழுமையாகப் புதுப்பித்ததுடன், 412 ஊராட்சிகளில் 411 ஊராட்சிகளுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கி மொத்தக் கடன் பெற்றுத் தந்து, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் உதவியுடன் பல பிரச்சனைகளைச் சரிசெய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.32 மணியளவில் ரிஷிவந்தியம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தன்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, திருக்கோவிலூர் வட்டாரம் தகடி ஊராட்சியில் காலை உணவுத் திட்டத்தில் சமையலராகப் பணியாற்றிய தேவிபாலா என்ற பெண்ணை ஏன் வேலையை விட்டு நீக்கினீர்கள் எனக் கேட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அதற்குத் தனக்கு அதிகாரமில்லை என்றும், கிராம அளவிலான கண்காணிப்புக் குழுவே அதை முடிவு செய்யும் என்றும் பதிலளித்த நிலையில், MLA வசந்தம் கார்த்திகேயன் “நான் யார் என்று தெரியுமா? இங்கு 20 வருடம் MLA தெரியுமா?” என மிகவும் சத்தமாகக் கத்திப் பேசியதாகவும், தான் சாதி பார்த்து அப்பெண்ணை நீக்கியதாகக் குற்றம் சாட்டியதாகவும் தெரிவித்துள்ளார். அவர் சம்பந்தமில்லாமல் கடுமையாகப் பேசியதால் அந்த உரையாடலைத் தான் பதிவு செய்ததாகவும் லலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 19-ஆம் தேதி மதியம் MLA தரப்பிலிருந்து மீண்டும் அழைப்பு வந்ததாகவும், அதில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலாளர் வேல் பழனியம்மாள், “நீங்கள் எதற்கு சாதி பார்த்து தேவிபாலாவை வேலையில் இருந்து நீக்கினீர்கள்?” எனக் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்பணியில் தான் இதுவரை யாரையும் நியமிக்கவில்லை என்றும், தனக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் கூறியும், MLA வசந்தம் கார்த்திகேயனும், விசிக வேல் பழனியம்மாளும் இணைந்து தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் தவறான செய்திகளைப் பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இவர்களின் தனிப்பட்ட நோக்கம் என்னவென்று தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ள வட்டார இயக்குநர் லலிதா, தன்மீது சுமத்தப்படும் அபாண்டமான குற்றச்சாட்டுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
