LATEST NEWS
“மலர் தூவியது இருக்கட்டும்.. விவசாயிகளுக்குச் சொன்னீங்களா..?” சோத்துப்பாறை அணையில் தவெக நிர்வாகிகள் செய்த செயலால் வெடித்த சர்ச்சை..!!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் பாசனப் பகுதிகளான கைலாசபட்டி, லட்சுமிபுரம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 2,865 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் புதிய ஆயக்கட்டு பகுதிகளான கைலாசபட்டி, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 1,040 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாகப் பெய்துள்ளதால் கண்மாய்கள் மற்றும் குளங்கள் முழுமையாக நிரம்பாத நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்கு முறைப்படி நீர் திறக்க தமிழக அரசு இதுவரை அரசாணை வெளியிடவில்லை. இந்நிலையில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் வழிகாட்டுதலின்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி வடகிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி தலைமையில் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டு, மலர்தூவி வரவேற்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கும் விவசாய சங்கத்தினருக்கும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, அரசாணை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் உத்தரவு இல்லாமல் நீர் திறக்கப்பட்ட இந்தச் செயல் விவசாயிகளிடையே அதிர்ச்சியையும், பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பெரியகுளம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசன் விளக்கமளிக்கையில், அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை விவசாயிகள் எடுத்துக் கொள்ளலாம் என்றாலும், உபரி நீர் நின்றுவிட்டால் அது நின்றுவிடும் எனக் கூறினார். மேலும், தவெக நிர்வாகிகள் தற்போது நீரைத் திறந்துவிட்டுள்ளது முறைப்படியான பாசன நீர் திறப்பு இல்லை என்றும், தமிழக அரசிடம் அரசாணை பெற்ற பிறகு விவசாயிகளுக்கு முறைப்படி அறிவிக்கப்பட்டு பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதற்கிடையே, அரசின் உத்தரவு மற்றும் முன்னறிவிப்பு இன்றி தவெக நிர்வாகிகள் அணை நீரைத் திறந்து வைத்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு பாஜக நிர்வாகி வானதி ஸ்ரீனிவாசன் தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். திடீரெனத் தண்ணீர் திறப்பதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து எதிர்பாரா விபத்துகள் ஏற்படும் அபாயமும், விவசாயிகளுக்குப் பாதிப்பும் ஏற்படாதா எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், இது குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரித்து விதிமீறல் உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆளுங்கட்சியினர் என்ற போர்வையில் மக்கள் பிரதிநிதி அல்லாதோர் நிர்வாக நடைமுறைகளில் தலையிடுவதையும், அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்துவதையும் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ள நிலையில், “மலர் தூவியது இருக்கட்டும்.. விவசாயிகளுக்குச் சொன்னீங்களா?” என நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
