LATEST NEWS
உடல்நிலை குறித்து அரசு மௌனம் ஏன்..? தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய கொளத்தூர் மக்கள்..!
சென்னை கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து சட்டப்பூர்வமாக வெளியிடக்கூடிய அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட செம்பியம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் எழுத்தர் ஜி. தேவராஜன் என்பவர் சார்பில் 2026 நவம்பர் 18 அன்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2026 செப்டம்பர் 9-ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து, தொடக்கத்தில் வெளியான தகவல்களுக்குப் பிறகு எவ்வித அலுவல் ரீதியான அறிக்கையும் வெளியிடப்படவில்லை என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டப்படி அனுமதிக்கப்பட்ட தகவல்களை வெளியிடக் கோரி சுகாதாரத் துறை செயலாளர், சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு நவம்பர் 5 மற்றும் நவம்பர் 12 ஆகிய தேதிகளில் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பிரதிநிதியின் தனிப்பட்ட மருத்துவ ரகசியங்களையோ அல்லது சிகிச்சை விவரங்களையோ கேட்காமல், பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அடிப்படை உடல்நிலை தகவல்களை மட்டுமே கோருவதாக மனுதாரர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், எம்எல்ஏ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கொளத்தூர் தொகுதி மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் எவ்வித இடையூறுமின்றி கவனிக்கப்படுவதை உறுதி செய்ய நிர்வாக ரீதியிலான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
