CRIME
மலையேற்றப் பயணத்தில் திடீர் திருப்பம்.. வற்புறுத்தி மது அருந்த வைத்த நண்பர்கள்… 7 நாட்களாக மாயமான எம்பிஏ மாணவிக்கு நேர்ந்த கதி என்ன..? விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!
உத்தரகாண்ட் மாநிலம் கர்வால் பகுதியில் உள்ள தயாரா புக்யால் மலையேற்றப் பயணத்திற்காக, எம்பிஏ மாணவியான பபிதா பாண்டே தனது நண்பர்கள் ஹர்மன்பிரீத் மற்றும் ஹர்மன்பால் ஆகியோருடன் சென்றுள்ளார். கடந்த மே 26, 27 ஆகிய தேதிகளில் கங்கோத்ரிக்குச் சென்ற அவர்கள், மே 28-ஆம் தேதி இரவு ‘ரத்தோல்’ முகாமில் தங்கியிருந்தனர். அன்று மாலை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த பபிதா, தனது செல்போனுக்கு வந்த அழைப்பைப் பேசியபடியே முகாமிற்கு வெளியே சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள், அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்துவிட்டுப் பின்னர் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து, காவல்துறை, வனத்துறை, தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படைகள் மற்றும் ராணுவத்தினர் இணைந்து 150-க்கும் மேற்பட்டோருடன் அப்பகுதியிலும் அருகிலுள்ள கோயின் ஏரியிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்; இருப்பினும், ஏழு நாட்களுக்கும் மேலாகியும் பபிதா குறித்து எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற தீவிர விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பபிதா போலி அனுமதிச் சீட்டைப் பயன்படுத்தி உத்தரகாண்டிற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது. மேலும், தனது மகள் தோழிகளுடன் சுற்றுலா செல்வதாகத் தன்னிடம் கூறியதாகவும், ஆண் நண்பர்களுடன் சென்றதை மறைத்துவிட்டதாகவும் பபிதாவின் தாயார் தெரிவித்துள்ளார். அதேபோல், உடன் சென்ற நண்பர்கள் இருவரும் பபிதாவை வற்புறுத்தி மது அருந்த வைத்ததாகவும், இதனால் அவர் மன வருத்தத்தில் இருந்ததாகவும் பபிதாவின் அண்ணன் குற்றம் சாட்டியுள்ளார். பபிதா தானாகவே எங்காவது சென்றுவிட்டாரா? அல்லது அவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்ததா? அல்லது உடன் சென்ற நண்பர்களுக்கு இதில் தொடர்புள்ளதா? எனப் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
