CRIME
“உயிரோடு இருந்தபோது இடமில்லை, இறந்த பிறகாவது இங்கேயே இருக்கட்டும்..!” கணவர் வீட்டு வாசலில் எரிந்த சகோதரியின் சிதை.. அதிர்ச்சி பின்னணி..!!
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தின் சதர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படாஹி கிராமத்தில், உயிரிழந்த பெண்ணின் உடலை அவரது கணவர் வீட்டின் வாசலிலேயே சகோதரர் தகனம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று 35 வயதான விபா தாக்கூர் என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். தனது சகோதரிக்கு அவரது கணவர் வீட்டார் விஷம் கொடுத்துக் கொலை செய்துவிட்டதாக விபாவின் சகோதரர் ஆகாஷ் சவுத்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விபாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் வீட்டைப் பூட்டிவிட்டுத் தலைமறைவாகியுள்ளனர்.
இதனால் ஆத்திரமும் வேதனையும் அடைந்த ஆகாஷ் சவுத்ரி, செவ்வாய்க்கிழமை அன்று தனது சகோதரியின் உடலை அவரது கணவர் வீட்டின் வாசலிலேயே வைத்துத் தகனம் செய்தார். இது குறித்துப் பேசிய அவர், “எனது சகோதரி உயிரோடு இருந்தபோது இந்த வீட்டிற்குள் நிம்மதியாக வாழ முடியவில்லை. எனவே அவரது மரணத்திற்குப் பிறகாவது இந்த வீட்டின் வாசலில் அவருக்கு ஓர் இடம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று உருக்கமாகத் தெரிவித்தார். கணவர் வீட்டின் வாசலிலேயே பெண் எரியூட்டப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
