LATEST NEWS
“எனக்குள் கடவுள் புகுந்துவிட்டார்…” நடுரோட்டில் பேருந்தை மறித்து கோஷமிட்ட இளைஞர்.. பயணிகள் அலறியடித்த நிலையில் போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மை..!!
கர்நாடக மாநிலம் மாண்டியா நகரின் முக்கியச் சந்திப்பான மகாவீர் சர்க்கிள் பகுதியில், வெள்ளிக்கிழமை காலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் அரசுப் பேருந்தை வழிமறித்து இளைஞர் ஒருவர் மத கோஷம் எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இளைஞர், சாலையில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்பாகத் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, பேருந்துக்கு நேராக நின்று “அல்லாஹு அக்பர்” என உரக்க முழக்கமிட்டுள்ளார். இந்த எதிர்பாராத செயலால் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் அப்பகுதி வாகன ஓட்டிகளிடையே சிறிது நேரம் பதற்றம் நிலவியது; கோஷம் எழுப்பிய பின்னர் அந்த இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து மாண்டியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஷோபா ராணி கூறுகையில், சிசிடிவி காட்சிகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், ஹலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த உமர் பாரூக் என்ற அந்த இளைஞரைப் பிடித்துக் காவலில் எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளதுடன், “தனக்குள் கடவுள் புகுந்துவிட்டதாக” அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். மேலும், அவரது இரண்டாவது மனைவி ஏற்கனவே அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததும், குடும்பப் பிரச்சினை காரணமாக அவர் கடந்த சில நாட்களாக விசித்திரமாக நடந்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, உமர் பாரூக்கின் மனநிலையைப் பரிசோதிக்க மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும், மருத்துவ அறிக்கை மற்றும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
