LATEST NEWS
“ஓஹோ இது தான் உண்மையா..” பேருந்தில் முதியவரைத் தகாத முறையில் தொடுமாறு வற்புறுத்திய இளம் பெண்.. கொந்தளித்த இணையவாசிகள்.. கடைசியில் வெளிவந்த அதிர்ச்சி ட்விஸ்ட்..!
பேருந்தினுள் ஒரு முதியவரைத் தகாத முறையில் தொடுமாறு இளம் பெண் ஒருவர் வற்புறுத்துவது போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்தக் காணொளியில், சிவப்பு நிற ஆடை அணிந்த பெண் தன்னைத்தானே வீடியோ பதிவு செய்தவாறு, அருகில் நின்ற முதியவரின் கையைத் தன் மீது படுமாறு மீண்டும் மீண்டும் நெருங்கிச் செல்கிறார். இதைப் பார்த்த சமூக ஆர்வலர் தீபிகா பரத்வாஜ் உள்ளிட்ட பலரும், அந்தப் பெண் பொய்யான பாலியல் துன்புறுத்தல் புகார் கூறி பார்வையாளர்களை ஈர்க்க முயல்வதாகக் கடுமையாக விமர்சித்தனர். மேலும், கேரளாவில் இன்ஃப்ளூயன்சர் ஷிம்ஜிதா முஸ்தஃபா பதிவிட்ட வீடியோவால் யு. தீபக் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை ஒப்பிட்டு, மற்றுமொரு ஆணின் வாழ்க்கை சீரழிந்துவிடும் என இணையவாசிகள் கவலை தெரிவித்தனர்.
ஆனால், சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்தக் காணொளி நிஜ வாழ்க்கைச் சம்பவம் அல்ல என்பது விரைவில் தெரியவந்தது. அது ‘ஜனக்’ என்ற மராத்தி திரைப்படத்தின் ஒரு காட்சி என இணையவாசிகள் ஆதாரங்களுடன் அடையாளம் கண்டனர். அந்த வீடியோவில் நடித்திருந்தவர்கள் நடிகை அனுஷ்கா பிம்புத்கர் மற்றும் மூத்த நடிகர் அவினாஷ் நார்கர் என்பதும் உறுதியானது. படப்பிடிப்புத் தளத்தில் அவர்கள் அதே ஆடைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் படத்தின் டிரெய்லர் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அது ஒரு திரைப்படக் காட்சி என்பது தெளிவானது.
தவறான தகவல்களைப் பரப்பும் வைரல் வீடியோக்கள் மற்றும் உண்மைத் தன்மையை ஆராயாமல் நடத்தப்படும் இணையவழி விசாரணைகளின் அபாயங்களை மையமாக வைத்தே இந்த ‘ஜனக்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நடிகை சயாலி சஞ்சீவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உண்மை வெளிவருவதற்கு முன்பே சமூக ஊடகக் குற்றச்சாட்டுகள் எவ்வாறு பொதுமக்களின் கருத்தைத் திசைதிருப்பி, தனிநபர்களின் வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்பதை இப்படம் ஆராய்கிறது.
இந்த வைரல் காணொளி, கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 42 வயதான விற்பனை மேலாளர் யு. தீபக்கின் சோகமான மரணத்தை மீண்டும் நினைவூட்டியது. பேருந்துப் பயணத்தின்போது தீபக் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தி இன்ஃப்ளூயன்சர் ஷிம்ஜிதா முஸ்தஃபா பதிவிட்ட காணொளி 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. இதனால் ஏற்பட்ட பொது அவமானமும் இணையவழி அவதூறும் தாங்க முடியாமல் தீபக் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஷிம்ஜிதா முஸ்தஃபா ஜனவரி 21 அன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
