“ஒரு பந்து கூட வீசவில்லை… ஆனாலும் பாகிஸ்தான் சாம்பியனா..?” நடுவரே வீரர்களுடன் சேர்ந்து போட்ட ஆட்டத்தால் வெடித்த மெகா சர்ச்சை..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஒரு பந்து கூட வீசவில்லை… ஆனாலும் பாகிஸ்தான் சாம்பியனா..?” நடுவரே வீரர்களுடன் சேர்ந்து போட்ட ஆட்டத்தால் வெடித்த மெகா சர்ச்சை..!

Published

on

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற 2026-ம் ஆண்டுக்கான பார்வையற்றோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றன. பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இறுதிப்போட்டி நாளன்று தொடர்ந்து மழை பெய்ததால், ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. மாற்று நாளும் அறிவிக்கப்படாத நிலையில், நெட் ரன் ரேட் மற்றும் தொடரின் செயல்பாடுகள் அடிப்படையில் பாகிஸ்தான் அணி சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. இறுதிப்போட்டியே நடைபெறாத சூழலில் இரு அணிகளையும் கூட்டுச் சாம்பியன்களாக அறிவிக்காமல் பாகிஸ்தானுக்கு மட்டும் கோப்பை வழங்கப்பட்டதற்கு இந்திய அணி கடும் எதிர்ப்பு தெரிவித்து, பரிசளிப்பு விழாவைப் புறக்கணித்தது.

இந்த விவகாரத்தில் உலக பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சிலின் தொழில்நுட்பக் குழு இரு அணிகளையும் கூட்டுச் சாம்பியன்களாக அறிவிக்கப் பரிந்துரைத்ததாகவும், ஆனால் அமைப்பின் தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருமான சுல்தான் ஷா அதனைப் புறக்கணித்து பாகிஸ்தானை வெற்றியாளராக அறிவிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் இந்திய தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து அதிருப்தி தெரிவித்த இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷைலேந்திர யாதவ், தன்னிச்சையாக எடுக்கப்பட்ட இந்த முடிவு ஏமாற்றமளிப்பதாகவும், உரிய தீர்வு காணப்படாவிட்டால் எதிர்காலத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்பது குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

Advertisement

கோப்பை வழங்கப்பட்ட சர்ச்சை ஓய்வதற்குள்ளாகவே, தொடர் முழுவதும் நடுவராகப் பணியாற்றிய பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர், பாகிஸ்தான் வீரர்களுடன் இணைந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், குறிப்பிட்ட நடுவர் பாகிஸ்தான் வீரர்களுடன் சேர்ந்து கைகளால் விமானம் விழுந்து நொறுங்குவது போன்ற சைகைகளைச் செய்வது பதிவாகியுள்ளது. போட்டி அதிகாரியாகப் பணியாற்றிய ஒருவரின் இந்தச் செயல் இந்திய தரப்பினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுவரின் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம், ஒரு நடுவரின் தலையாய கடமை நடுநிலையுடன் செயல்படுவதுதான் என்றும், எந்தவொரு அணிக்கும் ஆதரவாக இருப்பது போன்ற தோற்றத்தைக்கூட அவர் ஏற்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது. சர்வதேசப் போட்டிகளில் விளையாட்டு ஒழுக்கமும், போட்டி அமைப்புகளின் நம்பகத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் பிரதான கோரிக்கையாக உள்ளது. தற்போது கோப்பை சர்ச்சையுடன் நடுவரின் பாரபட்சமான செயல்பாடும் இணைந்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் அமைப்புகள் இதன் மீது எடுக்கப்போகும் நடவடிக்கை குறித்து விளையாட்டு ஆர்வலர்கள் உற்றுநோக்கி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in