LATEST NEWS
“கத்துக்குட்டி விஜய்யின் அரசியலுக்கு ‘பலிகடாவானாரா’ மதுரை ஆட்சியர்..?!” – நயினார் நாகேந்திரன் ஆவேசத் தாக்குதல்..!!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு உதாசீனப்படுத்திவிட்டதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். வரவிருக்கும் இடைத்தேர்தலில் இஸ்லாமிய சமூகத்தினரின் வாக்குகளை முழுமையாகப் பெற வேண்டும் என்ற நோக்கிலும், சிறுபான்மையினரின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும், முருக பக்தர்களின் வழிபாட்டு உரிமையைத் தடுக்கும் வகையில் தெரிந்தே இந்த மாபெரும் வரலாற்றுப் பிழையை முதலமைச்சர் செய்துள்ளதாக அவர் சாடியுள்ளார்.
இந்த விவகாரத்தில் நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். முதலமைச்சர் விஜய்யின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கும் தவறான முடிவுகளுக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிந்தே ‘பலிகடாவாக’ மாறி, தனது தலையைக் கொடுத்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நீதித்துறையின் உத்தரவுகளைச் செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள், ஆட்சியாளர்களின் அரசியல் லாபத்திற்காகச் செயல்படுவது ஏற்புடையதல்ல என்பதையும் அவரது பதிவு சுட்டிக்காட்டுகிறது.
‘திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று ஒருநாள் மட்டும் தீபம் ஏற்றுங்கள்’ என உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவைப் பிறப்பித்ததோடு, ‘நீதித்துறையுடன் விளையாடாதீர்கள், உத்தரவை உடனடியாகச் செயல்படுத்துங்கள்’ என உயர் நீதிமன்றமும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இவ்வளவு கடுமையான உத்தரவுகள் இருந்தபோதிலும், அவற்றை மதிக்காமல் செயல்பட்ட முதலமைச்சர் விஜய்யையும், அவரது அரசையும் சட்டம் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்று நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார்.
பெரும்பான்மை இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி, நீதிமன்றங்களைப் பகைத்துக் கொண்டு எந்த அரியணையைத் தக்கவைக்க முதலமைச்சர் விஜய் நினைக்கிறாரோ, அந்தப் பதவியும் ஆட்சியும் இனி நீண்ட நாள் நீடிக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் இதே தவறைச் செய்த திமுக தனது ஆட்சியை இழந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய தவெக அரசிற்கும் அழிவுக்கான ‘கவுண்டவுன்’ தொடங்கிவிட்டதாகவும், அதிகார ஆணவத்திற்கு முருகப்பெருமான் தக்க பாடம் புகட்டுவார் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
