LATEST NEWS
பார்க்கும்போதே நெஞ்சம் பதைபதைக்குது..” கண் இமைக்கும் நேரத்தில் 180 டிகிரி திரும்பிய பாலம்… உயிரைக் கையில் பிடித்தபடி தொங்கும் இளைஞர்.. உறைய வைக்கும் வைரல் வீடியோ..!!
தெற்கு சிலியின் மகல்லனஸ் பகுதியில் உள்ள டோரெஸ் டெல் பெயின் தேசியப் பூங்காவில், ஆழமான பள்ளத்தாக்கின் மீது அமைக்கப்பட்ட தொங்கு பாலம் பலத்த காற்றால் ஆடும் திகில் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜெர்மனியின் டசல்டார்ஃப் நகரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஹென்றி, காற்று வேகமாக வீசியதால் பாலத்தின் நடுவில் சிக்கிக் கொண்டு, கீழே விழாமல் இருக்க இரு கைகளாலும் கயிற்றை இறுகப் பற்றியபடியும் சமநிலையைத் தக்கவைக்க கால்களை விரித்தபடியும் போராடுகிறார். சுமார் 18 கிலோ எடையுள்ள கனமான பையை முதுகில் சுமந்திருந்த அவருக்கு இது மேலும் சவாலாக அமைந்தது.
சிலி செய்தி நிறுவனமான ’24 ஹோராஸ்’ தகவலின்படி, ஹென்றி தனது காதலியுடன் 7 நாள் ‘ஓ-சர்க்யூட்’ மலையேற்றப் பயணத்தில் ஈடுபட்டிருந்தார். அவரது காதலி சற்று முன்பே வானிலை அமைதியாக இருந்தபோது பாலத்தைக் கடந்துவிட்ட நிலையில், ஹென்றி கடக்கத் தொடங்கியதும் திடீரென பலத்த காற்று வீசத் தொடங்கியது. உடன் பயணித்த சுற்றுலாப் பயணி மார்ட்டின் எஸ்டெபன் கோன்சாலஸ் லோபஸ் இந்தக் காட்சியைப் படம்பிடித்ததோடு, காற்றின் வேகத்தால் பாலம் 180 டிகிரி வரை தலைகீழாகத் திரும்பி பின்னர் மீண்டும் நேராகி ஊஞ்சல் போல ஆடியதாகவும் தெரிவித்தார்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஹென்றி மெதுவாகப் பாலத்தின் மறுபக்கத்தை அடைந்து பாதுகாப்பாகத் தப்பினார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிலி வனத்துறையான CONAF அதிகாரிகள் விரைந்து வந்து மற்ற சுற்றுலாப் பயணிகள் அந்தப் பாலத்தைக் கடப்பதைத் தடுத்தனர். வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், படகோனியாவின் வானிலை நிமிடத்திற்கு நிமிடம் மாறும் தன்மை கொண்டது என்றும், ஹென்றி உயிர் தப்பியது அதிர்ஷ்டம் என்றும் அதிர்ச்சியும் நிம்மதியும் கலந்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
