LATEST NEWS
CM விஜய் அரசுக்கு அடுத்த சிக்கல்..! துணை சபாநாயகர் மீது கொலை மிரட்டல் வழக்கு.. அதிரடியாகக் களமிறங்கிய உயர் நீதிமன்றம்..!!
தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, கார்த்திக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆளுங்கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
மனுதாரர் கார்த்திக்குமார் தாக்கல் செய்துள்ள புகாரில், தங்களது பகுதியின் அடிப்படைத் தேவையான குடிநீர் பிரச்சினை குறித்து முறையிடுவதற்காகத் துணை சபாநாயகர் ரவிசங்கரை அணுகியதாகக் குறிப்பிட்டுள்ளார். அப்போது, தன்னைத் தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக அவர் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தனக்கு உதவாமல், மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் கிருபாநிதி துணை சபாநாயகருக்கு ஆதரவாகச் செயல்பட்டுத் துணை போனதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நாளை அல்லது நாளை மறுநாள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வரவுள்ளது. ஏற்கனவே தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பல்வேறு சர்ச்சைகளும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், தற்போது துணை சபாநாயகர் மீதே கொலை மிரட்டல் புகார் எழுந்திருப்பது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு மற்றொரு பெரும் அரசியல் மற்றும் நிர்வாக நெருக்கடியாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
