CRIME
“17 ஆண்டுகளாக எஸ்கேப் ஆன தபால்காரர்”… ஓய்வு பெற்ற பிறகு திடீரென சிக்கியது எப்படி?.. ரூ.3.22 லட்சம் எல்.ஐ.சி மோசடியில் ட்விஸ்ட்…!!
சென்னையில் எல்ஐசி பாலிசிதாரருக்குச் சேர வேண்டிய ரூ.3.22 லட்சம் முதிர்வுத் தொகை காசோலையை ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்த வழக்கில், 17 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த ஓய்வுபெற்ற தபால்காரர் ராமமூர்த்தி (64) கைது செய்யப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு இந்த மோசடி நடைபெற்றபோது, அவர் தபால்காரராகப் பணியாற்றி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விஜயகுமார் என்பவருக்குரிய ரூ.3,22,500 மதிப்பிலான எல்ஐசி முதிர்வுத் தொகை காசோலை, உரிய நபரிடம் சேராமல் போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் வங்கியில் பணமாக்கப்பட்டுள்ளது. தபால் துறையில் பணியாற்றிய ராமமூர்த்தி, தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார். இது குறித்து அண்ணாசாலை எல்ஐசி அலுவலக மேலாளர் அளித்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய வேறு சில நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான மணலியைச் சேர்ந்த ராமமூர்த்தி மட்டும் போலீசாரிடம் சிக்காமல் 17 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தார். தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வந்த நிலையில், தற்போது அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த மோசடிப் பின்னணி குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
