CRIME
“தயவுசெய்து என் மகனைத் திருப்பிக் கொடுங்கள்..!” கதறி அழுத தாய்க்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. காரில் கடத்தப்பட்ட 5 வயதுச் சிறுவனுக்கு நேர்ந்த கொடூர கதி.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் மாயமான 5 வயது சிறுவன் அருஷ் ஷர்மா கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பத்ரி பஜார் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த எல்.கே.ஜி மாணவனான அருஷைக் காணவில்லை என அவனது தாயார் ரூபி ஷர்மா காவல் நிலையத்திலும், எஸ்.எஸ்.பி அலுவலகத்திலும் கதறி அழுதபடி புகார் அளித்தார். “தயவுசெய்து என் மகனைத் திருப்பிக் கொடுங்கள், அவன் இல்லாமல் என்னால் வாழ முடியாது” எனத் தாய் கதறிய காட்சி அங்கிருந்தவர்களின் கண்களைக் குளமாக்கியது. அருஷின் தந்தை தேவ்நந்தன் தியோரியாவில் வேறொரு பெண்ணுடன் வசித்து வரும் நிலையில், தன் மகனை மட்டுமே நம்பி வாழ்ந்த தாய்க்கு இச்சம்பவம் தாங்க முடியாத பேரிடியாக அமைந்துள்ளது.
சிறுவன் மாயமானது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, பத்ரி பஜார் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், குற்றம் சாட்டப்பட்ட ஹிருத்திக் யாதவ் என்பவர் அருஷை ஒரு எர்டிகா காரில் கடத்திச் செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஹிருத்திக் யாதவை ஷாப்பூர் போலீசாரும் குற்றப்பிரிவு குழுவினரும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுவனைக் கொலை செய்து பாககடா அருகே உள்ள ராப்தி ஆற்றில் உடலை வீசிவிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தன் மகன் கொலை செய்யப்பட்டதை அறிந்த தாய் ரூபி ஷர்மா, வெள்ளிக்கிழமை மாலை ஷாப்பூர் காவல் நிலையத்திற்குச் சென்று குற்றவாளி ஹிருத்திக் யாதவை ஒருமுறையாவது நேரில் சந்திக்க அனுமதிக்குமாறு காவல்துறையினரிடம் மன்றாடினார். “என் மகனுடன் அவருக்கு என்ன பகை இருந்தது, என் மகனை எங்கே வைத்திருக்கிறார் என்று நான் நேரில் கேட்க வேண்டும்” என அவர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. படிப்பிலும் குணத்திலும் சிறந்து விளங்கிய சிறுவன் அருஷின் மரணச் செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளியின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, பத்ரி பஜார் முதல் பாககடா வரையிலான பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், ராப்தி ஆற்றில் சிறுவனின் உடலைத் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சனிக்கிழமை வரை சிறுவனின் உடல் மீட்கப்படாததால், குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணையைத் திசைதிருப்பப் பார்க்கிறாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
