CRIME
“லக்னோவில் அதிர்ச்சி”… இளம்பெண், பெற்றோர் மீது அமிலம் மற்றும் கத்தி வீச்சால் உயிருக்குப் போராடும் நிலை…வெறிச்செயலில் ஈடுபட்டவர் கைது…!!
உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவின் உதைகஞ்ச் பகுதியில், திருமணத்திற்கு மறுத்ததால் 18 வயது இளம்பெண் மீது அமில வீச்சு நடத்தப்பட்டதோடு, தடுக்க வந்த அவரது பெற்றோர் மீதும் கத்தி மற்றும் அமிலத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் கூரை வழியாக வீட்டிற்குள் புகுந்த உறவினரான தௌசீஃப் என்ற மன்னா (பாதிக்கப்பட்ட வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் வசிப்பவர்), நேரடியாக இளம்பெண் மீது அமிலத்தை வீசியுள்ளார்.
இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுக் காப்பாற்ற வந்த அவரது தந்தை ஷாநவாஸ் ஆலம் (40) மற்றும் தாய் அஸ்மா பானோ (30) ஆகியோர் மீதும் அமிலம் வீசப்பட்டதோடு கத்தியாலும் குத்தப்பட்டுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தப்பி ஓட முயன்ற குற்றவாளியை மடக்கிப் பிடித்தனர்; அப்போது அமிலம் பட்டுத் தாக்குதல் நடத்திய நபருக்கும் காயம் ஏற்பட்டது.
படுகாயமடைந்த இளம்பெண் மற்றும் அவரது பெற்றோர் லக்னோவில் உள்ள KGMU ட்ராமா சென்டரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்; இதில் இளம்பெண்ணின் நிலை கவலைக்கிடமாகவும், பெற்றோரின் நிலை தீவிரமாகவும் உள்ளது. தங்களது குடும்பத்தையே அழிக்கும் நோக்கத்தில் குற்றவாளி வீட்டிற்குள் புகுந்ததாகப் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்; இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையின் அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியிடப்படவுள்ளன.
