LATEST NEWS
“அன்பில் மகேஷ் பணம் கேட்டாரா.. வாங்கியதற்காவது ஆதாரம் உண்டா?” – நீதிமன்றத்தில் லஞ்ச வழக்கு குறித்து வழக்கறிஞர் அதிரடி வாதம்.!!
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ. 400 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனு நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர், “விசாரணைக்கும் சோதனைக்கும் நாங்கள் முழு ஒத்துழைப்பு தந்துள்ளோம், காவல்துறையிடம் இருந்து எதையும் மறைக்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை” என்று வாதாடினார்.
தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கக் கோரிய அரசாணை, நிர்வாகிகளின் கோரிக்கை அடிப்படையிலேயே வெளியிடப்பட்டது என்று குறிப்பிட்ட வழக்கறிஞர், இந்த விதியை மாற்றக் கோரி மனு அளித்தவர்களையே தற்போது சாட்சிகளாகச் சேர்த்துள்ளனர் என்று சுட்டிக்காட்டினார். மேலும், சட்டப்படி பார்த்தால் சாட்சிகளாக உள்ளவர்களைத்தான் தற்போது கைது செய்திருக்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் நியாயமான மற்றும் சுதந்திரமான விசாரணை மட்டுமே நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பணம் கேட்டதாகவோ அல்லது லஞ்சமாகப் பெற்றதாகவோ ஏதேனும் ஒரு ஆதாரம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பிய வழக்கறிஞர், குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதிதான் என்பதால் அவரை மனிதத்தன்மையுடன் நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மும்பை தாக்குதல் வழக்கில் கைதான பயங்கரவாதி அஜ்மல் கசாபிற்குக்கூட சிறையில் வசதிகள் செய்து தரப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், விசாரணையை ஒரு துன்புறுத்தலாக மாற்றக் கூடாது என்றும், வீட்டு உணவு மற்றும் மருந்து வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும் தனது வாதத்தை நிறைவு செய்தார்.
