LATEST NEWS
“750 இளைஞர்கள், பூத்துக்கு 10 பேர்” தவெக வெற்றிகளுக்கு மத்தியில் திமுக 2-வது இடம் பிடித்த ரகசியம்.. உதயநிதியின் மாஸ் வியூகம் அம்பலம்..!!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் திமுக இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ள சூழலில், திமுக கணிசமான வாக்குகளைப் பெற்றுத் தனது செல்வாக்கை நிரூபித்துள்ளது. அதன்படி மதுராந்தகத்தில் 53,463 வாக்குகளையும், தாராபுரத்தில் 57,370 வாக்குகளையும் திமுக பெற்றுள்ளது.
திமுகவின் இந்த 2-வது இடத்திற்குப் பின்னணியில், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வகுத்த புதிய களப்பணி வியூகமே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. மூத்த நிர்வாகிகளின் தேர்தல் அனுபவத்தோடு இளைஞரணியின் வேகத்தையும் இணைத்துச் செயல்பட வைக்கும் அணுகுமுறையை அவர் கையாண்டுள்ளார். தேர்தல் பணிகளில் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், செந்தில் பாலாஜி மற்றும் சக்கரபாணி போன்ற மூத்த அமைச்சர்கள் தீவிரமாகப் பங்கெடுத்துள்ளனர்.
இவர்களுடன் இணைந்து செயல்பட, இளைஞரணியைச் சேர்ந்த சுமார் 750 நிர்வாகிகள் களமிறக்கப்பட்டனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 10 இளைஞர்கள் என்ற அடிப்படையில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்திக்கும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது. இருப்பினும், உள்ளூர் அரசியல் சூழல் மற்றும் வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கு ஆகியவையும் இந்த வாக்கு எண்ணிக்கைக்குக் கூடுதல் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
