LATEST NEWS
“இப்படி உளறிட்டீங்களே பாஸ்…” இனி கொள்ளையடிக்க முடியாதே… வெளிநாட்டுல பதுங்கும் திமுக புள்ளிகள்… உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக ஐடி விங்..!!
தமிழக அரசியலில் தற்போதைய ஆளுங்கட்சியான திமுகவிற்கும், தமிழக முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே ஒரு புதிய வார்த்தைப் போர் வெடித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பேசிய திமுகவின் முக்கிய நிர்வாகியான உதயநிதி ஸ்டாலின், “இப்போது ஏற்பட்டுள்ள இந்த அரசியல் பேரிடர்க் காலத்திலும், தமிழ்நாட்டை நம்முடைய தலைவரும் திமுகவும் காப்பார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். உதயநிதியின் இந்த ‘அரசியல் பேரிடர்’ என்ற விமர்சனம் தவெக தரப்பை அசைத்துப் பார்த்துள்ளதுடன், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு தவெகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தங்களது அதிகாரப்பூர்வ ‘X’ வலைத்தள பக்கத்தில் மிகக் கடுமையான சொற்களால் பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா உருவாக்கிய கட்சியை அவரது குடும்பத்தைக்கூட ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஒரு குறிப்பிட்ட குடும்பம் மட்டுமே ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றியதுதான் தமிழக அரசியலுக்கு ஏற்பட்ட உண்மையான பேரிடர்க் காலம் என்று அதில் சாடியுள்ளது. மேலும், கலைஞரை உயர்த்திய எம்.ஜி.ஆரை எவ்வித நன்றி விசுவாசமும் இன்றி கட்சியை விட்டுத் தூக்கி வீசியதே திமுகவின் வீழ்ச்சி என்றும், லஞ்சமும் ஊழலும் நிறைந்த திமுகவின் ஆட்சியை ‘திருட்டு மாடல்’ என்றும் தவெக பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
தற்போதைய சூழலில் ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொள்ளையடித்த திமுகவிற்கு, இனி அரசியலில் கொள்ளையடிக்க இயலாத நிலையை தவெகவின் வருகை உண்டாக்கியுள்ளது என்றும், இதுவே திமுகவிற்கான உண்மையான அரசியல் பேரிடர்க் காலம் என்றும் தவெக சுட்டிக்காட்டியுள்ளது. ஊழல் வழக்குகளில் சிக்கி வெளிநாடுகளில் பதுங்கித் திரியும் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மாட்டும் பட்சத்தில், கட்சியின் முக்கியக் குடும்பமும் திக்கித் திணறும் என்ற அச்சமே திமுகவை இப்படிப் பேச வைக்கிறது என்றும், தீதும் சூதும் நிறைந்த திமுகவின் பிடியில் இருந்து தப்பிய தமிழக மக்களுக்கு தவெக தலைவர் விஜய்யின் மக்களாட்சி ஒரு அழகிய தென்றல் காலமாகவும், பேரின்பக் காலமாகவும் மலர்ந்துள்ளது என்றும் கூறி, உளறி உண்மையை ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள் என தவெக ஐடி விங் தங்களது பதிவை மிகக் காரசாரமாக முடித்துள்ளது.
