LATEST NEWS
BREAKING: தவெக எம்எல்ஏ-விடம் பேரம் பேசிய விவகாரம்.. மேலும் ஒருவர் கைது..!!
தமிழகத்தில் ஆளும் தமிழக வெற்றி கழக அரசைக் கவிழ்க்கதிமுக தரப்பில் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், தனிப்படை போலீசாரால் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜா அளித்த புகாரின் பேரில், சட்டமன்ற சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ₹35 கோடி ரூபாய் பேரம் பேசியதாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த, ஏற்கனவே கைதான முக்கிய குற்றவாளியான தேர்தல் வியூக அமைப்பாளர் திருநாவுக்கரசுவின்கார் ஓட்டுநர் கிருஷ்ணா என்பவரை போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் தற்போது கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணாவின் இந்த கைதைத் தொடர்ந்து, தவெக எம்.எல்.ஏ-க்களிடம் குதிரை பேரம் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதி வழக்கில்இதுவரை மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைதான நரேஷ், முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை சென்னையில் நேரில் சந்தித்ததாகக் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
