LATEST NEWS
சினிமாவையே மிஞ்சிய சம்பவம்..! “கைதிகளைக்கூட கண்காணிக்க முடியாத கையாலாகாத அரசு…” தவெக அரசு மீது வானதி சீனிவாசன் கடும் தாக்கு..!!
கைதிகளைக்கூட கண்காணிக்க முடியாத கையாலாகாத தவெக அரசு என பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தேனி மாவட்டச் சிறையிலிருந்து நேற்று இரவு சுமார் 17 கைதிகள் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக நாடகமாடி, சிறைக் காவலர்களைத் தாக்கி தப்பிச் சென்றதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சினிமாவையே மிஞ்சும் இந்தச் சம்பவம், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் தவெக அரசு எந்த அளவுக்குத் தோல்வியடைந்திருக்கிறது என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. காவல்துறை வெளியில் இருக்கும் குற்றவாளிகளைக் கைது செய்வதில் தான் அலட்சியம் காட்டுகிறது என்றால் சிறைக்குள் இருக்கும் கைதிகளைக் கண்காணிப்பதிலும் படுதோல்வி அடைந்திருக்கிறது.
இத்தனை காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தும் சுமார் 17 கைதிகள் தப்பிச் செல்லும் அளவுக்கு சிறைத் துறையின் பாதுகாப்பு சீர்குலைந்திருப்பது கேள்விக் குறியாகியுள்ளது. தொடர்ந்து தமிழக மக்களின் பாதுகாப்பையும், சட்டம் ஒழுங்கையும் உறுதிசெய்ய தவறி வரும் தவெக அரசு, தனது நிர்வாகத் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும். தப்பியோடிய கைதிகள் அனைவரையும் உடனடியாக மீண்டும் கைது செய்து, இந்தப் பாதுகாப்புக் குளறுபடிக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் சிறைகளில் கூடுதல் பாதுகாப்பினைத் தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
