LATEST NEWS
“ரூ.300 கோடி ஒதுக்கியும் அனுமதி தராதது ஏன்..? வெளிமாநில நிறுவனங்களுக்கு தாரை வார்க்கத் திட்டமா..?” இலவச வேட்டி, சேலை தாமதம் குறித்து டிடிவி தினகரன்சரமாரி கேள்வி..!!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்திலேயே வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்காக நெசவாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் தருவாயிலும் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால், அத்தொழிலையே நம்பியிருக்கும் சுமார் 3 லட்சம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தரம் கொண்ட புதிய ரக நூலில் வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்யும் வகையில், கடந்த ஜூலை மாதமே முதற்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், அதற்கான உற்பத்தியைத் தொடங்குவதற்கு நெசவாளர்களுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பொங்கல் பண்டிகையொட்டி மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தில் பல்வேறு நிபந்தனைகளை விதித்து பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டிருக்கிறதா அல்லது ஏற்கனவே தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் போன்றவற்றை வெளிமாநில நிறுவனங்களுக்கு வழங்கியதைப் போல இத்திட்டத்தையும் வெளிமாநில நிறுவனங்களுக்கு தாரை வார்க்க தவெக அரசு முடிவு செய்துள்ளதா என்ற சந்தேகம் எழுவதாகவும், எனவே சுமார் 3 லட்சம் நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இதற்கான அனுமதியை உடனடியாக வழங்கிடுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
