CINEMA
பணக்காரர்கள் தப்பிக்க சட்டம் உதவுதா…!ரஜினி சொன்னது எவ்வளவு உண்மை…!ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா வரிசையில் ஜோதிகா.. சினிமாவில் போல்டாக நடித்தால் தப்பா…!முழு படத்தை பார்க்காமல் ஜோதிகாவை தப்பா பேசாதீங்க! கொந்தளிக்கும் ரசிகர்கள்…!
அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா, அசுதோஷ் கோவாரிகர் நடிப்பில் கடந்த மே 22ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான படம் தான் ‘சிஸ்டம்’ (System). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னது போல “இங்கு சிஸ்டம் சரியில்லை” என்பதை ஆணித்தரமாக, அழுத்தம் திருத்தமாக இந்த படம் பேசியுள்ளது. ஏற்கனவே சூர்யாவின் ‘ஜெய்பீம்’ போன்ற படங்களில் சட்டத்துறையில் உள்ள ஓட்டைகளை வைத்து சாமானிய மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றனர் என்பதை தோலுரித்துக் காட்டியிருப்பார்கள். அதே பாணியில், இந்த ‘சிஸ்டம்’ திரைப்படமும் பணக்காரர்கள் பெரிய வழக்கறிஞர்களை வைத்துக்கொண்டு சட்டத்திலிருந்து எப்படி தப்பிக்கின்றனர், அவர்களை ஒரு சாமானியர் எப்படி சிக்க வைக்கிறார் என்ற சமூக அக்கறையுள்ள கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
இருப்பினும், படத்தின் ஒட்டுமொத்த கருத்தையும் விடுத்து, ஒரே ஒரு சின்ன காட்சியை மட்டும் சமூக வலைத்தளங்களில் வெட்டி எடுத்துப் போட்டு ஜோதிகாவை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். படத்தில் ஜோதிகாவின் கணவர் விபத்தில் சிக்கி, மாற்றுத்திறனாளியாக வீல் சேரில் இருக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இந்தச் சூழலில், கதையின் ஓட்டத்திற்காக ஒரே ஒரு காட்சியில் போலீஸ் அதிகாரி ஒருவருடன் ஜோதிகா உறவு வைத்துக் கொள்வது போலக் காட்டப்பட்டிருக்கும். அந்த காட்சி கூட ஆபாசமாக இருக்காது; “உனக்கு உன் வீட்டில் பொண்டாட்டி இல்லை, எனக்கு என் வீட்டில் புருஷன், குழந்தை இருக்கே” என ஜோதிகா எதார்த்தமாகப் பேசிவிட்டு கிளம்பும் படிதான் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை மட்டும் வைத்து ஜோதிகாவையும் அவர் குடும்பத்தையும் அசிங்கப்படுத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நடிகை திரையில் ஏற்கும் கதாபாத்திரத்தை வைத்து, நிஜ வாழ்க்கையிலும் அவரது தனிப்பட்ட குணாதிசயங்களை விமர்சிப்பது மிகவும் தவறான விஷயமாகும். இதற்கு முன்பு ‘குஷி’ படத்தில் விஜய்யுடன் லிப் லாக் முத்தக் காட்சி, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் நெகட்டிவ் ரோல் என ஜோதிகா படு போல்டாக நடித்துள்ளார். அதேபோல் அனுஷ்கா ‘வானம்’ படத்திலும், ரம்யா கிருஷ்ணன் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திலும் போல்டான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அந்த கதாபாத்திரங்களின் செய்கைகளை வைத்து அந்த நடிகைகளின் நிஜ கேரக்டர்களை அட்டாக் செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று சினிமா ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதனிடையே, ‘சிஸ்டம்’ படத்தை அமேசான் பிரைமில் முழுமையாகப் பார்த்தால், அந்த சீனில் ஜோதிகாவின் ‘சரிகா’ கதாபாத்திரம் ஏன் அப்படி நடந்து கொள்கிறது என்பதும், அந்த காட்சி படத்தின் வலிமைக்கு எவ்வளவு முக்கியம் என்பதும் புரியும் என ஜோதிகாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். தமிழ் டப்பிங்கில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள இத்திரைப்படம், நம் நாட்டின் அரசியல் மற்றும் நீதித்துறை சிஸ்டம் எப்படியெல்லாம் கெட்டுப் போய் கிடக்கிறது என்பதை மிகத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
