LATEST NEWS
முதல்வர் விஜய் எடுத்த அந்த ஒரு முடிவு…”அவருக்கு என்ன தெரியாது, ஆனா எனக்கு…”நண்பர் விஷாலுக்கு என்மேல கோபம்…”தளபதி விஜய்யின் பெயரை காப்பாற்றுவேன்…”அமைச்சர் ராஜ்மோகன் கூல் ரிப்ளை…!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், கல்வி அமைச்சர் ராஜ்மோகனுக்குக் கூடுதலாகத் திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுச் சட்டத்துறையையும் ஒதுக்கீடு செய்துள்ளார். இ முடிவிற்குத் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் அதிருப்தி வெளியிட்டிருந்த நடிகர் விஷால், நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் திரைப்படத் துறையை மீட்டெடுக்க அனுபவமிக்க ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். கடந்த 30 ஆண்டுகளாகத் திரையுலகில் இருக்கும் முதல்வர் விஜய்க்கு இதன் சூழல் நன்கு தெரியும் என்றும், ஆனால் அனுபவம் குறைந்த ஒருவரிடம் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளை எப்படிக் கொண்டு சேர்ப்பது என்ற கேள்வி எழுவதாகவும் விஷால் தனது தனிப்பட்ட கருத்தைப் பதிவிட்டிருந்தார்.
இதனுடன், திரையுலகின் நீண்டகாலக் கோரிக்கைகளான அரசு மூலமான டிக்கெட் விற்பனை முறை, உள்ளாட்சி வரி ரத்து மற்றும் சிறிய படங்களுக்கான மானியத் தொகையை உயர்த்துதல் போன்ற 9 ஆண்டுகால கோரிக்கைகளையும் விஷால் சுட்டிக்காட்டியிருந்தார். இக்கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறிய நிலையில், இதற்குப் பல நடிகர்கள் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பாகவும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வந்தனர். குறிப்பாக, ‘முதல்வரையும் இதேபோல் கேள்வி கேட்பீர்களா?’ என நடிகர் கிருஷ்ணா போன்றோர் விஷாலுக்கு எதிராகக் கேள்வி எழுப்பியதால் திரையுலகில் புதிய பஞ்சாயத்து வெடித்தது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், நடிகர் விஷாலின் விமர்சனத்திற்கு மிகவும் நாகரிகமான முறையில் விளக்கம் அளித்துள்ளார். “என்னை விமர்சனம் செய்தவர்களுக்கும் சேர்த்தே நான் வேலை பார்ப்பேன்; நண்பர் விஷாலை எனக்கு மிகவும் பிடிக்கும், அவருடைய படங்களையும் நான் பார்த்திருக்கிறேன்” என்று கூறிய அமைச்சர், விஷாலுக்குத் தன்னைத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் எனக்கு அவரை நன்றாகத் தெரியும் என்றார். மேலும், “எல்லாம் நம்பிக்கைதான், திரையுலகினரின் நம்பிக்கையைப் பெறும் வகையில் சிறப்பாகப் பணியாற்றி, தளபதி விஜய்யின் பெயரை நான் காப்பாற்றுவேன்” என்றும் அமைச்சர் ராஜ்மோகன் நெகிழ்ச்சியுடன் உறுதியளித்துள்ளார்.
