LATEST NEWS
“கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மட்டும்தான் பாக்கி…! நிழல் முதலமைச்சரா நீங்க…? ஆதவ் அர்ஜுனாவை கிண்டலடித்த அதிமுக இன்பதுரை எம்பி…!!
தமிழக வெற்றி கழகத்தின் முக்கியப் புள்ளியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, மற்ற அரசியல் இயக்கங்களை அண்மைக் காலமாகத் தீவிரமாக விமர்சித்து வருகிறார். இவரது இந்த அதிரடிப் போக்கு தவெக அரசாங்கத்தின் ஒரு ‘நிழல் முதலமைச்சர்’ போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாக அதிமுக மாநிலங்களவை எம்பி இன்பதுரை சமூக வலைதளத்தில் கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும், ஆதவ் அர்ஜுனா இதுவரை இணையாத ஒரே இயக்கம் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ மட்டும்தான் என அவர் நையாண்டியாகப் பதிவிட்டுள்ளார். 90 சதவீத அதிமுகவினர் தவெகவில் இணைவார்கள் என்றும், தவெகதான் உண்மையான அதிமுக என்றும் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் தங்களின் பலத்த கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
அதிமுகவிலிருந்து தவெகவிற்கு அரசியல் தலைவர்களின் இடப்பெயர்வு தொடர்ந்து அதிகரித்து வருவது தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்ற அதிமுக எல்.எம்.ஏ-க்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா உள்ளிட்ட நால்வர் தங்களது பதவிகளைத் துறந்துவிட்டு தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இவர்களுடன் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் ஓய்வுபெற்ற டி.ஜி.பி ஆர். நடராஜ் போன்ற முக்கியப் பிரமுகர்களும் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் முறைப்படி இணைந்துள்ளனர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக சந்தித்த சரிவுகளாலும், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் கொள்கைகளைத் தவெக ஏற்றுக்கொண்டதாலும் இந்த முடிவை எடுத்ததாகக் கட்சியில் இணைந்தவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
