LATEST NEWS
“பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய 18 வயது சிறுமிகள்…”குடித்துவிட்டு ஆடிய ஆட்டம்… கொலையில் முடிந்த தகராறு… கோயம்பேட்டில் சொகுசு கார் ஓட்டுநரின் வெறிச்செயல்…!”
சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் பாரில் குடித்துவிட்டு நடனம் ஆடியபோது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு, இறுதியில் ஒரு கொடூர கொலையில் முடிந்துள்ளது. பாரில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பவுன்சர்களால் வெளியேற்றப்பட்ட இரு தரப்பினரும், வெளியிலும் மோதிக்கொண்டனர். பின்னர் ஒரு தரப்பினர் மூன்று இருசக்கர வாகனங்களிலும், மற்றொரு தரப்பினர் சொகுசு காரிலும் அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது பைக் குழுவினர் காரின் மீது கல்வீச முயன்றதாகக் கூறப்படும் நிலையில், ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் சொகுசு காரை வேகமாக இயக்கி இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளார். இந்த பயங்கர விபத்தில், விழுப்புரத்தைச் சேர்ந்த 18 வயதுடைய யான்சி என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்; அவருடன் வந்த 17 வயது தோழி பலத்த காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், காரை ஏற்றி கொலை செய்த சுமன் சக்திவேல் உட்பட 6 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த யான்சி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் மீட்பு முகாமில் வசித்து வந்தவர் என்பதும், கடந்த சில நாட்களாகத் தனது தோழிகளுடன் தங்கியிருந்ததும் தெரியவந்தது. கடந்த 28ஆம் தேதி சினிமாவுக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற இந்த சிறுமிகள், விடிய விடியக் குடித்துவிட்டு மறுநாள் காலையில் வீட்டிற்கு வந்ததால் பெற்றோரிடம் திட்டு வாங்கியுள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் கோயம்பேடு பாருக்குச் சென்றபோதுதான் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தின் மூலம், கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள அந்த ஹோட்டல் பாரில், சட்டவிரோதமாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு மது வழங்கப்பட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அரசு விதிகளின்படி நட்சத்திர ஹோட்டல் பார்கள் நள்ளிரவு 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும் நிலையில், இந்த குறிப்பிட்ட பாரின் உரிமையாளர் அரசியல் பிரமுகர் மற்றும் பிரபல தொழிலதிபர் என்பதால், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வார இறுதி நாட்களில் விடிய விடிய அதிகாலை 3 மணி வரை சட்டவிரோதமாகப் பாரை நடத்தி வந்துள்ளார். பணத்திற்காகச் சிறுமிகளைப் போதைக்கு அடிமையாக்கி, அவர்கள் தவறான பாதைக்குச் செல்ல இந்த பார் நிர்வாகம் துணையாக இருந்துள்ளதை போலீசார் உறுதி செய்துள்ளனர். சட்ட விதிமீறல்கள் அம்பலமானதைத் தொடர்ந்து அந்த தனியார் மதுபான பாருக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுமிகளை பாருக்குள் அனுமதித்தது ஏன், அரசு விதிகளை மீறியது ஏன் என்பது குறித்து பார் உரிமையாளரான அந்த அரசியல் பிரமுகரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
