LATEST NEWS
ஓடி ஒளிய மாட்டோம்…! ஓட்டுப் போட்டதை நினைத்துப் பெருமைப்படுவீர்கள்… தவெகவின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் வெளியிட்ட உருக்கமான அறிக்கை…!!
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் புதிய ஆட்சியை அமைத்துள்ளது. இருப்பினும், பொறுப்பேற்ற மூன்று வாரங்களிலேயே முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அமைச்சரவையின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன. இத்தகைய சூழலில், திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், புதிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான ரமேஷ், தனது தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவித்துப் பேசினார்.
அப்போது, கடந்த கால மக்கள் பிரதிநிதிகளைப் போலத் தங்களைச் சந்திக்காமல் ஓடி ஒளிய மாட்டோம் என்றும், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகள் அடங்கிய மனுக்களைத் தொகுதி அலுவலகத்தில் சமர்ப்பித்தால் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருப்போம் என்றும் அவர் உறுதியளித்தார். தங்கள் குடும்பத்தில் இருந்து முதன்முறையாக அரசியலுக்கு வந்து மக்கள் பிரதிநிதியாகப் பொறுப்பேற்றுள்ளதால், நிர்வாக நடைமுறைகளைக் கற்றுக் கொள்ளச் சற்றுக் கால அவகாசம் தேவைப்படுவதாக அமைச்சர் ரமேஷ் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊழலற்ற முறையில் தொகுதியை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வது மற்றும் பொதுமக்களின் மனுக்களை விரைவாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காண்பதற்கான ஆரம்பக்கட்ட ஆலோசனைகள் தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தவெக அரசுக்கு மக்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும், தங்களுக்கு ஓட்டுப் போட்டதற்காகப் பொதுமக்கள் அனைவரும் பிற்காலத்தில் பெருமைப்படும் வகையில் தங்களின் செயல்பாடுகள் அமையும் என்றும் அவர் மிகவும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
