CINEMA
“திரையுலகையே உலுக்கிய ரூ.400 கோடி வழக்கு…”ஒரே ஒரு பாடலால் வந்த வினை… ரிலீசுக்கு முன் தயாரிப்பாளர்களுக்கு விழுந்த பலத்த அடி…””ஜூன் 5 ரிலீசில் ட்விஸ்ட்…சிக்கலில் மிருணாள் தாக்குர் திரைப்படம்…!
பாலிவுட் இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான், மிருணாள் தாக்குர் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள காதல் மற்றும் குடும்ப பின்னணித் திரைப்படம், வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் தற்போது பெரும் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பிரபல பாடல்களின் மறு உருவாக்கம் தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், படத்தின் வெளியீட்டைச் சுற்றி பாலிவுட் வட்டாரத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் சட்டப் போராட்டம் ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் ஒரு புதிய சவாலாக மாறியுள்ளது.
கடந்த 1999ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘பிவி நம்பர் 1’ திரைப்படத்தில் இடம்பெற்று ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற “சுன்னரி சுன்னரி” மற்றும் “இஷ்க் சோனா ஹை” ஆகிய இரண்டு பாடல்களும், உரிய அனுமதி பெறாமல் இந்த புதிய படத்தில் மறு உருவாக்கம் (Remake) செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக ‘பிவி நம்பர் 1’ படத்தின் தயாரிப்பாளரும், பூஜா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைவருமான வாசு பகனானி நீதிமன்றத்தை அணுகியுள்ளார். தங்களது மனுவில், சம்பந்தப்பட்ட பாடல்களின் ஆடியோ உரிமைகள் மட்டுமே டிப்ஸ் மியூசிக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாகவும், அவற்றின் வீடியோ மற்றும் ரீமேக் உரிமைகள் இன்னமும் தங்களது நிறுவனத்திடமே இருப்பதாகவும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காப்புரிமை மீறல் காரணமாக, இயக்குநர் டேவிட் தவான், டிப்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் தயாரிப்பாளர்கள் ரமேஷ் தவுரானி, குமார் தவுரானி ஆகியோருக்கு எதிராக ரூ.400 கோடி நஷ்டஈடு கோரி வாசு பகனானி தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், சர்ச்சைக்குரிய அந்த இரண்டு பாடல்களையும் திரைப்படத்திலிருந்தும், அதன் அனைத்து விளம்பரப் பொருட்களிலிருந்தும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் கூடுதலாக ரூ.100 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைவரிடமும் எழுந்துள்ளது.
