“வீரப்பன் பேட்டியால் வந்த வினை…அவதூறு பரப்பினால் சும்மா விடமாட்டேன்…90-களின் கனவுக்கன்னி சுகன்யாவின் மாபெரும் சட்டப் போராட்டம்… குவியும் பாராட்டுகள்…! – cinefeeds
Connect with us

CINEMA

“வீரப்பன் பேட்டியால் வந்த வினை…அவதூறு பரப்பினால் சும்மா விடமாட்டேன்…90-களின் கனவுக்கன்னி சுகன்யாவின் மாபெரும் சட்டப் போராட்டம்… குவியும் பாராட்டுகள்…!

Published

on

1990-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த சுகன்யா தொடர்ந்த அவதூறு வழக்கில், சன் தொலைக்காட்சி நிறுவனம் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சுமார் 30 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கில், ஏற்கனவே சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது. கடந்த 1996-ஆம் ஆண்டு சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் நேரில் சந்தித்து எடுத்த 9 மணி நேரப் பேட்டியின் சில பகுதிகள் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் நடிகை சுகன்யா குறித்து அவதூறான கருத்துகள் இடம்பெற்றதால், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி சன் டிவி மற்றும் நக்கீரன் கோபால் மீது சுகன்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, சன் டிவி தரப்பில் தங்களுக்கு யாரையும் அவதூறு செய்யும் நோக்கம் இல்லை என்றும், நக்கீரன் கோபால் கொடுத்த வீடியோவைத்தான் ஒளிபரப்பினோம் என்றும் வாதிடப்பட்டது. ஆனால், நக்கீரன் கோபால் தரப்போ, தாம் வழங்கிய 9 மணி நேர வீடியோ பதிவில் 4 மணி நேரம் மட்டுமே சன் டிவி ஒளிபரப்பியதாகவும், எதை வெளியிட வேண்டும், எதை நீக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் முழு அதிகாரமும் சன் டிவிக்கே இருந்தது என்றும் விளக்கம் அளித்தார். இருதரப்பு வாதங்களையும் ஆய்வு செய்த கீழமை நீதிமன்றம், அவதூறான தகவல்களை நீக்கும் அதிகாரம் இருந்தும் அதைச் செய்யாமல் வெளியிட்டது சன் டிவியின் தவறு என்று சுட்டிக்காட்டி, சுகன்யாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

Advertisement

இத்தீர்ப்பை எதிர்த்து சன் டிவி செய்த மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு, சன் டிவியின் மனுவைத் தள்ளுபடி செய்து கீழமை நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவிக்கும் அறிவிப்பைத் தனது சொந்த சேனலில் வெளியிடாமல், வேறு ஒரு பத்திரிகையில் சன் டிவி வெளியிட்டது ஏன் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். அவதூறான நிகழ்ச்சியைப் பார்த்த தொலைக்காட்சிப் பார்வையாளர்களுக்கு விளக்கம் சென்றடைய வேண்டுமெனில், அதே தளத்தில்தான் வருத்தம் தெரிவிக்க வேண்டுமே தவிர, வேறு ஊடகத்தில் வெளியிடுவது சரியான நடைமுறை அல்ல என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கறாராகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in