LATEST NEWS
திமுக – தவெக போட்டிக்கு நடுவே புகுந்த ‘2000 ரூபாய்’ சர்ச்சை…என் தொகுதி வாக்குகள் பாதிக்கப்பட்டது…சேலம் தவெக-வுக்குள் என்னதான் நடக்கிறது? ஓமலூர் வேட்பாளர் அதியமான் ஓப்பனாகப் பேசிய பகீர் உண்மை…!
திருச்சியில் நடைபெற்ற தவெக-வின் நன்றி அறிவிப்பு கூட்டத்தில், “தேர்தல் அரசியலில் இவ்வளவு காலம் நீடித்து வந்த சாதி, மதம் மற்றும் பணம் கொடுத்து வாக்குகள் வாங்குவதை நாம் உடைத்தெறிந்துள்ளோம்” என அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் ஆக்ரோஷமாகப் பேசியிருந்தார். மேலும், தற்குறி என்று விமர்சித்தவர்களின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கிவிட்டதாகவும், தமிழக அரசியலில் இனி போட்டி என்பது திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையேதான் என்றும் அவர் பிரகடனப்படுத்தினார். லஞ்ச ஊழலற்ற, அரசியலமைப்பிற்கு உட்பட்ட ஆட்சியைத் தவெக வழங்கும் என முதல்வர் விஜய் மேடையில் முழங்கிய சில நாட்களிலேயே, கட்சியின் வேட்பாளர் ஒருவரே அதற்கு நேர்மாறாகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் ஓமலூர் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட அதியமான், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி சமூக ஊடகங்களில் கடுமையான சர்ச்சையை உலுக்கியெடுத்து வருகிறது. அந்த வீடியோவில், “நம்முடைய பக்கத்து தொகுதியான சேலம் மேற்கில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் லட்சுமணன் வாக்காளர்களுக்கு தலா 2000 ரூபாய் பணம் கொடுத்தார்; அவர் அப்படிப் பணம் கொடுத்ததால், என்னுடைய ஓமலூர் தொகுதியில் நமக்குக் கிடைக்க வேண்டிய ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன” என்று அதியமான் ஓப்பனாகப் பேசியுள்ளார்.
‘ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் முறையை ஒழித்துக்கட்டிவிட்டோம்’ எனத் திருச்சி மேடையில் முதல்வர் விஜய் பெருமிதத்தோடு குறிப்பிட்ட நிலையில், அதே கட்சியின் வேட்பாளர் தங்களது கட்சி வேட்பாளரே வாக்காளர்களுக்கு 2000 ரூபாய் பணம் கொடுத்ததை ஒப்புக்கொள்ளும் விதமாகப் பேசியிருப்பது தவெக தலைமைக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியினரின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் இந்த வீடியோ பதிவு, தவெக-வின் தூய்மை அரசியல் முழக்கத்தின் நம்பகத்தன்மை குறித்தான விவாதங்களை அரசியல் தளத்தில் மீண்டும் சூடாக்கியுள்ளது.
