LATEST NEWS
அம்மா பிணமாக கிடக்க, தவித்த இரு குழந்தைகள்…கள்ளத்தொடர்பைக் கேட்ட மனைவியை இப்படியா செய்வது…தனியாக சென்ற மனைவியைத் துரத்தி துரத்தி பழிவாங்கிய கணவன்…ஆத்தூரில் பரபரப்பை ஏற்படுத்திய கொடூர சம்பவம்…
சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் (38). இவருக்கும் சித்ரா (30) என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 14 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்பத்தை கவனித்து வந்த சரவணன், நாளடைவில் வீட்டுச் செலவிற்குப் பணம் தருவதைக் குறைத்துக் கொண்டதுடன், அடிக்கடி வீட்டிற்கு வராமல் வெளியிலேயே தங்கியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சித்ரா தனது கணவரைக் கண்காணித்தபோது, அவருக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தட்டிகேட்ட சித்ராவுடன் சரவணன் வாக்குவாதத்தில் ஈடுபடவே, கணவனைப் பிரிந்து வாழ முடிவு செய்த சித்ரா, தன் குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு அருகில் வாடகை வீடு எடுத்துத் தனியாக வசித்து வந்துள்ளார்.
தனியாகச் சென்ற பிறகும் மனைவியை விடாத சரவணன், தினமும் சித்ராவின் வீட்டிற்கும் அவர் வேலை செய்யும் இடத்திற்கும் சென்று தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால், சித்ரா தனது முடிவில் உறுதியாக இருந்ததால் ஆத்திரமடைந்த சரவணன், சித்ராவுக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதால்தான் தன்னுடன் வாழ மறுக்கிறார் என உறவினர்களிடம் அவதூறு பரப்பியுள்ளார். மேலும், சித்ராவின் வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் நடத்தையைச் சந்தேகப்பட்டுத் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தச் சூழலில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரவிலும் இவர்களுக்குள் மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற சரவணன், மனைவி சித்ராவின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
மறுநாள் காலையில் குழந்தைகள் எழுந்து பார்த்தபோது, தாய் சித்ரா பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் நகர போலீசார் மற்றும் டி.எஸ்.பி சத்யராஜ் ஆகியோர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சித்ரா கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில், குற்றவாளியான சரவணன் ஆத்தூர் காவல் நிலையத்தில் நேராகச் சென்று சரணடைந்தார். போலீசாரின் விசாரணையிலும், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். பெற்ற பிள்ளைகளின் கண் முன்னே தாயைக் தந்தை கழுத்தை நெரித்துக் கொலை செய்த இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
