CINEMA
அராஜகமற்ற ஆட்சி…எம்.ஜி.ஆரின் சாதனையை முறியடித்த விஜய்…விஜய்யை நேரில் சந்தித்து பார்த்திபன் கொடுத்த ‘அந்த’ பரிசு…’விஜய பேரரசர்’ படத்தைக் கொடுத்து பார்த்திபன் செய்த மேஜிக்…!
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக, அதிமுக ஆகிய இரு துருவ அரசியலை, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே உடைத்தெறிந்து புதிய சாதனை படைத்துள்ளார் தவெக தலைவர் விஜய். மற்ற கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியை அமைத்திருந்தாலும், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, அன்று அரசியல் புரட்சியை ஏற்படுத்திய எம்.ஜி.ஆர் தனது முதல் தேர்தலில் வாங்கிய வாக்கு விழுக்காட்டை விட, விஜய் அதிக வாக்குகளைப் பெற்றிருப்பது அரசியல் அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், முதலமைச்சராகப் பதவியேற்றது முதல் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் திருச்சி கிழக்கில் அவர் பேசிய விதம், சொந்தக் கட்சியினரையே அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. தமக்குக் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தினால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய்யின் ஆட்சி தொடரும், இல்லையெனில் அவர் மீண்டும் சினிமா ஷூட்டிங்கிற்கே செல்ல வேண்டியதுதான் என அரசியல் வட்டாரத்தில் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.
இத்தகைய அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியிலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு திரைத்துறையைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பது சினிமா உலகினரை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக, கோலிவுட் பிரபலங்கள் பலரும் விஜய்யை நேரில் சந்தித்துத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் விஜய்யும் தன்னை நாடி வரும் திரைத்துறையினருக்குச் சலிப்பின்றி நேரம் ஒதுக்கி, புன்னகையோடு இன்முகத்துடன் வரவேற்றுப் புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வைக்கிறார். அந்த வரிசையில், எப்போதும் எல்லாவற்றிலும் தனித்துவத்தையும் வித்தியாசத்தையும் விரும்பும் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் நேற்று முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது பார்த்திபன் தனது வழக்கமான பாணியில், விஜய் மன்னர் உடையில் கம்பீரமாக இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தைப் பிரேம் செய்து அன்பளிப்பாக வழங்கினார். அதோடு நிறுத்தாமல், “சினிமாயணம் டூ சி.எம் ஆசனம்… அராஜகமற்ற ஆட்சியைத் தர அரகஜா திலகமிட்டு – விஜய பேரரசராக அரியணையை அலங்கரிக்கும் – உலக அரசியல் அதிர்Win முதல்வருக்கு வாழ்த்துகள்!” எனத் தனது கவித்துவமான வரிகளால் விஜய்யைப் பாராட்டியுள்ளார். இதற்கு முன்னதாக, நடிகை த்ரிஷா மற்றும் விஜய் ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தபோது, பார்த்திபன் குந்தவை பாத்திரத்தைக் குறிப்பிட்டுச் சொன்ன கருத்தும், அதற்குத் த்ரிஷா கொந்தளித்து ட்வீட் போட்டதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்தப் பழைய கசப்புகளைத் தள்ளிவைத்துவிட்டு, பார்த்திபன் தற்போது விஜய்யை ‘விஜய பேரரசர்’ என வாழ்த்தியிருப்பது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
