CINEMA
மீண்டும் உடைந்த பாலிவுட் கனவு…”எதிர்பார்த்து ஏமாந்த புட்ட பொம்மா…பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வரலாம்னு நினைச்சா இப்படியா? கிளாமராக நடித்தும் எடுபடாமல் போன பூஜா ஹெக்டேவின் பிளான்…!
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமுடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவரது முதல் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால், தனது கவனத்தைத் தெலுங்கு சினிமா பக்கம் திருப்பினார். அங்குக் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, முன்னணி நடிகையாக உயர்ந்த பூஜா ஹெக்டே, பின்னர் பெரும் புகழுடன் மீண்டும் தமிழுக்கே திரும்பினார். விஜய்யுடன் ‘பீஸ்ட்’, சூர்யாவுடன் ‘ரெட்ரோ’ மற்றும் தற்போது ராகவா லாரன்ஸுடன் ஒரு படம் எனத் கோலிவுட்டில் முன்னணி கதாநாயகியாகப் பிஸியாக வலம் வரத் தொடங்கினார்.
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக முத்திரை பதித்த பூஜா ஹெக்டேவுக்கு, பாலிவுட்டிலும் சாதிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இருந்தது. அங்கு அவர் நடித்த ‘ஹவுஸ்ஃபுல் 4’ திரைப்படத்தைத் தவிர மற்ற படங்கள் அனைத்தும் படுதோல்வியைச் சந்தித்தன. இதனால் பாலிவுட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, பிரபல கமர்ஷியல் இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில், வருண் தவானுக்கு ஜோடியாக நடித்த ‘ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை’ (Hai Jawani Toh Ishq Hona Hai) திரைப்படத்தை அவர் பெரிதும் நம்பியிருந்தார். டேவிட் தவானின் படங்கள் எப்போதுமே பாலிவுட்டில் மினிமம் கேரண்டி வசூலைக் கொடுக்கும் என்பதால், இப்படத்திற்காகக் கூடுதல் கிளாமராகவும் நடித்துப் பூஜா ஹெக்டே கணக்கு போட்டிருந்தார்.
இந்தப் படம் மட்டும் ஹிட் அடித்தால் பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வரலாம் எனப் பூஜா ஹெக்டே தரப்பு எதிர்பார்த்திருந்த சூழலில், படம் வெளியான பிறகு வெளியாகி வரும் நெகட்டிவ் விமர்சனங்கள் அவரது கனவில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளன. 90-களின் அவுட்டேட்டட் கதை மற்றும் திரைக்கதை எனப் படத்தை விமர்சகர்கள் சாடி வரும் நிலையில், பூஜா ஹெக்டே வெறும் கிளாமர் பொம்மையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். தென்னிந்தியாவில் ‘புட்ட பொம்மா’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பூஜா ஹெக்டேவுக்கு, பாலிவுட் கனவு இந்த முறையும் பலிக்காமல் போனது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
