CINEMA
50 ஆண்டுகால அரியணை ரகசியம்…சூப்பர் ஸ்டார் பந்தா துளியும் இல்லை…பாபா’ டூ ‘ஜெயிலர்’.. வீழ்ந்த போதெல்லாம் விஸ்வரூபம் எடுத்த ‘ஃபீனிக்ஸ்’ ரஜினிகாந்த்…பப்ளிக்கில் ரஜினி செய்த காரியம்…” ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிர்ந்துபோன போஸ் வெங்கட்…!
தமிழ் திரையுலகில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக ‘சூப்பர் ஸ்டார்’ என்ற ஒற்றை சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். எத்தனை இளம் கதாநாயகர்கள் வந்தாலும் அவர்களுக்கு இன்றும் சவாலான போட்டியைக் கொடுத்து வரும் ரஜினியின் இந்த அசாத்திய வெற்றிக்குக் காரணம், அவரது உழைப்பும் அர்ப்பணிப்பும் (Dedication) மட்டுமே. இத்தனை உச்சிக்குச் சென்ற பிறகும், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் தனது முதல் படமாக நினைத்து அவர் உழைப்பதால்தான், தலைமுறைகள் கடந்தும் அவரால் நம்பர் ஒன் இடத்தில் நீடிக்க முடிகிறது.
ரஜினிகாந்த் தன் திரைப்பயணத்தில் தோல்விகளையே சந்திக்காதவர் அல்ல; ஆனால், ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பிறகும் மிக பிரம்மாண்டமாக மீண்டெழும் வல்லமை படைத்தவர். ‘பாபா’ படத்தின் சரிவுக்குப் பின் ‘சந்திரமுகி’ என்ற மெகா ஹிட்டையும், ‘தர்பார், அண்ணாத்த’ படங்களின் சுமாரான வரவேற்பிற்குப் பிறகு ‘ஜெயிலர்’ என்ற வரலாற்றுச் சாதனை ப்ளாக்பஸ்டரையும் கொடுத்தவர் அவர். சமீபத்தில் வெளியான ‘வேட்டையன்’, ‘கூலி’ ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும், அடுத்ததாக வரவிருக்கும் ‘ஜெயிலர் 2’, சிபி சக்கரவர்த்தி படம் மற்றும் கமலுடன் இணையும் ‘KHXRK’ ஆகிய மூன்று படங்கள் மூலம் அவர் மீண்டும் பாக்ஸ் ஆபீஸில் விஸ்வரூபம் எடுப்பார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
அவரது அசுர வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் அவரிடம் துளியும் இல்லாத ‘ஈகோ’ குணமே ஆகும். நல்ல படங்களை இயக்கும் இயக்குநர்களைத் தேடிப் பாராட்டுவது, தனது வளர்ச்சிக்குக் காரணமான கலைஞானம் போன்றோருக்கு வீடு கட்டிக் கொடுப்பது என ரஜினியின் பெருந்தன்மைக்குச் சான்றுகள் பல உண்டு. படப்பிடிப்பு தளத்திலும் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற பந்தா இல்லாமல் சாதாரண மனிதராகவே வலம் வருவார். ‘சிவாஜி’ படப்பிடிப்பின் போது, தனக்கு உடை மாற்ற பிரத்யேக இடம் கேட்கச் சென்ற நடிகர் போஸ் வெங்கட், அங்கு பொது இடத்திலேயே ரஜினி சாதாரணமாக உடை மாற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவரது எளிமையைக் கண்டு வியந்துபோனதாக சமீபத்திய பேட்டியில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இந்த எதார்த்தமே ரஜினியை என்றும் மக்கள் நாயகனாக வாழ வைக்கிறது.
