CINEMA
நான் எந்த கட்சியையும் சார்ந்தவள் அல்ல, அம்மா சங்கத்தில் இருந்து நான் வெளியேறியது ஏன்? அதற்கான காரணம் குறித்து ஓபனாக பேசிய மலையாள நடிகை ஸ்வேதா மேனன்!
கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடந்த அம்மா சங்கத் தேர்தலில் முதல் முறையாக பெண்கள் இந்த அமைப்பின் நிர்வாக பொறுப்புக்கு வந்தனர்.நடிகை ஸ்வேதா மேனன் அம்மா சங்கத்தின் தலைவராகவும் பிரபல பின்னணி குரல் கலைஞர் குக்கூ பரமேஸ்வரன் பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்றனர். மேலும் ஸ்வேதாமேனன் தலைமையில் 17 பேர் கொண்ட பெண் நிர்வாகக்குழுவும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அம்மா சங்கத்தின் நிர்வாகிகளாக பதவியேற்ற 10 மாதங்களில் அதன் தலைவராக இருந்த ஸ்வேதா மேனனும் அந்த அமைப்பின் அனைத்து நிர்வாக உறுப்பினர்களும் கூண்டோடு ராஜினாமா செய்து அந்த சங்கத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.
இது மலையாள சினிமாத்துறையில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்து தனது வலைதள பக்கத்தில் நடிகை ஸ்வேதா மேனன் வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதில் நடிகை ஸ்வேதா மேனன் கூறியிருப்பதாவது, பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றேன். என்னால் முடிந்த அளவுக்கு தலைவராக நேர்மையாக செயல்பட்டேன். முந்தைய நிர்வாக குழுவின் செயல்பாடுகளை விசாரிக்கும் வாய்ப்பு எங்களுக்கு வழங்கப்படவில்லை. கடந்த இரண்டு நிர்வாகங்களின் கணக்குகளும் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.
நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவள் அல்ல. தனிப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்து சந்தித்ததால் கொள்கை உறுதியுள்ள ஒரு பெண்ணாக அம்மா சங்கத்திலிருந்து விலக முடிவு செய்தேன். அது பலவீனத்தால் எடுத்த முடிவு அல்ல; என் சுயமரியாதையால் தான் அந்த முடிவை எடுத்தேன் என்று நடிகை ஸ்வேதா மேனன் அந்த பதிவில் கூறியிருக்கிறார். மேலும் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ஸ்வேதா மேனன் விலகியது குறிப்பிடத்தக்கது.
