CINEMA
“அதிவேகமாகப் பணம் சம்பாதிக்கலாம், ஆனா”… சினிமாத்துறையின் நிஜ முகத்தைப் போட்டு உடைத்த நடிகை விசித்ரா..!!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் “மடிப்பு அம்சா”வாகவும், கவர்ச்சிப் புயலாகவும் வலம் வந்த நடிகை விசித்ரா, திருமணத்திற்குப் பிறகு திரையுலகை விட்டு விலகினார். நீண்ட இடைவெளிக்குப் பின் விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ மற்றும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிகள் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த அவர், பிக் பாஸ் வீட்டில் தனக்கு நேர்ந்த கசப்பான சினிமா அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது பெரும் விவாதப் பொருளானது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர், சினிமா என்பது மிக வேகமாகப் புகழும் பணமும் சம்பாதிப்பதற்கான ஒரு களம் என்றாலும், அங்கு உண்மையான அன்பையோ கருணையையோ எதிர்பார்க்க முடியாது என்று கூறியுள்ளார். குறிப்பாகப் புதுமுகமாக உள்ளே நுழையும்போது அவமானங்களையும் அலட்சியங்களையும் மட்டுமே சந்திக்க நேரிடும் என்றும், ஆனால் ஒரேயொரு ஹிட் படம் கொடுத்து ‘மார்க்கெட்’ வந்துவிட்டால், உங்களை அவமதித்த அத்தனை பேரும் புகழத் தொடங்கிவிடுவார்கள் என்றும் சினிமாவின் நிஜ முகத்தைப் போட்டுடைத்துள்ளார்.
மேலும், சினிமாவில் நிரந்தரமான நண்பனும் கிடையாது, நிரந்தரமான எதிரியும் கிடையாது என்பதால், அங்குள்ளவர்களிடம் எப்போதும் ஒரு குறிப்பிட்ட எல்லையையும் தூரத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று விசித்ரா அறிவுறுத்தியுள்ளார். பாசமாகப் பழகுகிறார்கள் என்று யாரிடமும் அளவுக்கு அதிகமாக நெருங்கிவிடக் கூடாது, அதேசமயம் யாரையும் எதிரியாக்கி ஒதுக்கவும் கூடாது என்றும், காலம் எப்படி வேண்டுமானாலும் மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் எப்போதுமே சினிமா மனிதர்களிடம் இந்தச் சரியான எல்லையை வைத்திருந்த காரணத்தினால்தான், இன்று எந்தவிதக் குழப்பமும் இல்லாமல், மிகுந்த சந்தோஷத்தோடும் நிம்மதியோடும் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதாக விசித்ரா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
