CINEMA
ஐயா என்னை மன்னிச்சுடுங்க…ரஜினிக்கு எது நல்லது…புது கட்சி.. பொதுத்தேர்தல் போட்டி! அண்ணாமலையின் அதிரடி அறிவிப்புக்கு நடுவே சிக்கிய ரஜினியின் அரசியல் மர்மம்…!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் பல தசாப்த கால ஏக்கமாக இருந்தது. 90-களின் மத்தியில் அப்போதைய அரசியல் சூழலில் திமுக – தமாகா கூட்டணிக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்ததில் இருந்தே ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பு தீவிரமடைந்தது. பல ஆண்டுகள் மௌனம் காத்து வந்த ரஜினி, கடந்த 2017-ஆம் ஆண்டு, “நான் அரசியலுக்கு வருவது உறுதி; எனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்றார். ஆனால், சில நாட்களிலேயே தனது உடல்நலத்தைக் காரணம் காட்டி, அரசியல் பிரவேசத்திலிருந்து அவர் திடீரென பின்வாங்கியது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பேரிடியாகவும், ஏமாற்றத்தின் உச்சமாகவும் அமைந்தது.
அரசியலில் இருந்து ரஜினி பின்வாங்கியிருந்தாலும், அண்மைய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ‘அரசியலுக்கு மட்டும் நான் வந்திருந்தால் கண்டிப்பாக வென்றிருப்பேன்’ என அவரே செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாஜாகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைதள நேரலையில் தோன்றி, ரஜினியின் அரசியல் ரகசியம் குறித்த அதிரடித் தகவல் ஒன்றை உடைத்துள்ளார். வரும் பொதுத்தேர்தலில் தான் புதிய கட்சி தொடங்கிப் போட்டியிடப் போவதாக அறிவித்த அண்ணாமலை, கடந்த 2020-ஆம் ஆண்டு தான் ஐபிஎஸ் பதவியைத் துறந்து டெல்லியில் பாஜகவில் இணையச் சென்றதற்கு முந்தைய நாள், ரஜினிகாந்த் தனக்குத் தொலைபேசியில் அழைத்துத் தனது புதிய கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை இப்பேட்டியில், “அப்போது தமிழ்நாட்டிற்கும், ரஜினிக்கும், எனக்கும் எது நல்லது என்று யோசித்தேன்; ரஜினி சார் அரசியலுக்கு வராமல் ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருப்பதே அவருக்கு நல்லது என முடிவு செய்தேன்” என்று கூறியுள்ளார். மேலும், ஏற்கனவே பாஜகவில் இணைவதாகக் கொடுத்த வாக்குறுதியின் காரணமாக, “ஐயா, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று ரஜினியிடம் கூறி அவரது அழைப்பை மறுத்ததாகவும், ரஜினியும் அதனைப் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார் என்றும் அண்ணாமலை நினைவுகூர்ந்துள்ளார். ரஜினி மட்டும் அன்று கட்சி தொடங்கி, அண்ணாமலை போன்ற இளைஞர்கள் அவருடன் இணைந்திருந்தால் தமிழக அரசியல் வரலாறு இன்று வேறு மாதிரியாக இருந்திருக்கும் என ரஜினி ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
