POLITICS
இதுவேற மாறி டுவிஸ்ட்..! தவெகவும் வேண்டாம்… அதிமுகவும் வேண்டாம்… புது ரூட்டில் களமிறங்கிய எஸ்.பி.வேலுமணி..? அதிர்ச்சியில் எடப்பாடி..!!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள சூழலில், அதிமுகவின் கொங்கு மண்டல முக்கியத் தலைவரான எஸ்.பி.வேலுமணி எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி வழங்கிய மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க அவர் மறுத்துவிட்டார். தவெகவில் இணையும்படி அவருக்கு அழைப்புகள் வந்தபோதிலும், அங்கு சென்றால் பல தலைவர்களில் ஒருவராக மட்டுமே சுருங்க நேரிடும் என்பதால் தவெக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் தவிர்த்து ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க அவர் திட்டமிட்டு வருகிறார்.
பாஜகவிலிருந்து அண்மையில் விலகி “We The Leaders” என்ற புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் எஸ்.பி.வேலுமணி கைகோர்க்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை விரைவில் தனது புதிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்டு பெரிய மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளார். அவரது கட்சியின் தொடக்கத்திலேயே இணைந்தால், கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுவாகக் கட்டமைக்கும் முக்கியப் பொறுப்பும், உயர் பதவியும் தமக்குக் கிடைக்கும் என்று வேலுமணி கணக்கு போடுவதாகக் கூறப்படுகிறது.
2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து வரும் நிலையில், அதிமுகவின் உள் கட்டமைப்பு பலவீனமடைந்து வருகிறது. ஏற்கனவே அதிமுகவிலிருந்து விலகிய செங்கோட்டையன் தவெக அரசில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், கொங்கு மண்டலத்தில் அசைக்க முடியாத செல்வாக்கு கொண்ட எஸ்.பி.வேலுமணியின் இந்த அடுத்தகட்ட முடிவு, தமிழக அரசியல் களத்தில் மிக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
