LATEST NEWS
“காரியப் பூனை திமுக..!” ஸ்டாலினின் விமர்சனத்திற்குத் தவெக ஐடி விங் கொடுத்த மரண அடி.. பரபரக்கும் அரசியல் களம்..!!
காவிரி விவகாரத்தில் திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளிடையே நிலவும் கடுமையான அரசியல் மோதல் எக்ஸ் தளப் பதிவுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், கர்நாடக அரசுடன் தனியாகப் பேச்சுவார்த்தை நடத்த முயன்று தவெக அரசு தனிமைப்பட்டு நிற்பதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் எச்சரிக்கையையும் மீறி கர்நாடகாவிற்கு தூது அனுப்பியதும், இறுதியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்குப் பின் “இப்போதைக்கு வரவேண்டாம்” என கர்நாடகா கதவைச் சாத்தியதும் தமிழகத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒற்றுமையைக் காட்டும் நிலையில், முதலமைச்சர் விஜய் இங்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தவெக ஐடி விங்க் வெளியிட்டுள்ள பதிவில், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் திமுக ஆட்சி பறிபோய் தவெக ஆட்சி அமைந்துவிட்டதே என்ற வன்மத்திலும் விரக்தியிலும் பேசுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. பல ஆண்டுகளாக ஒன்றிய அரசுடன் கூட்டணியில் இருந்த காலத்தில், காவிரிப் பிரச்சனைக்காக ஒருமுறையாவது மந்திரி பதவியை உதறாத திமுக, தற்போது மக்கள் நலன் சார்ந்து பேசாமல் சுயநலத்துடன் செயல்படுவதாகத் சாடியுள்ளது. ஆட்சியில் இருக்கும்போது அமைதியாக இருந்துவிட்டு, ஆட்சி பறிபோனதும் உரிமை முழக்கம் எழுப்புவது திமுகவின் வழக்கம் என்றும், விவசாயிகள் மற்றும் கர்நாடக வாழ் தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டே முதலமைச்சர் விஜய் மனசாட்சியுடன் செயல்படுகிறார் என்றும் தவெக தெரிவித்துள்ளது.
மேலும், காவிரி விவகாரத்தில் திமுக கபட நாடகமாடுவதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், கடந்த மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகத் தவிக்கும் திமுகவின் இந்த விமர்சனங்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்றும் தவெக தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழகத்தின் உயிர்ப் பிரச்சனையான காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் முறையான ஆலோசனைகளோடு செயல்பட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்த, தவெக தரப்போ திமுகவின் சுயநல அரசியலை அம்பலப்படுத்தி இரு தரப்பிலும் கடுமையான வார்த்தைப் போரை உருவாக்கியுள்ளது.
