LATEST NEWS
“என்னப்பா சொல்றீங்க… கடையில ஆளும் இல்ல, சிசிடிவியும் இல்ல..!” ஆனா ஒரு ரூபா கூட திருடு போகாதாம்… இந்தியால இப்படி ஒரு அதிசய ஊர் எங்க இருக்குன்னு தெரியுமா..?!
நவீன காலத்தில் கடைகளில் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்களும் காசாளர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் வேளையில், இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தில் நேர்மைக்கும் நம்பிக்கைக்கும் ஒரு தனித்துவமான சான்றாகக் கடைகள் இயங்கி வருகின்றன. நாட்டின் வடகிழக்கு மாநிலமான மிசோரமில் உள்ள கிராமப்புற சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. ஆனால், அங்குப் பொருட்கள் விற்கக் கடைக்காரர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். உள்ளூர் மொழியில் இந்த கடைகள் ‘நகா லோ தார்’ என்று அழைக்கப்படுகின்றன. இதற்கு ‘கடைக்காரர் இல்லாத கடை’ என்று பொருளாகும்.
இந்த கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளின் மீதும் அதன் விலை குறிக்கப்பட்டிருக்கும், மேலும் அதன் அருகே ஒரு சிறிய பெட்டி வைக்கப்பட்டிருக்கும். இங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டு, அதற்கான தொகையைக் கணக்கிட்டு அந்தப் பெட்டியில் போட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இங்குப் ரசீது போடும் காசாளரோ அல்லது கண்காணிக்கும் சிசிடிவி கேமராக்களோ எதுவுமே இல்லை. மிசோரமில் உள்ள சில கிராமங்கள் மற்றும் ஐசால் – சைதுல் நெடுஞ்சாலைப் பகுதிகளில், உள்ளூர் விவசாயிகள் காலையிலேயே தங்களது தோட்டங்களில் விளைந்த புதிய காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு அடுக்கி வைத்துவிட்டுத் தங்கள் வயல் வேலைகளுக்குச் சென்றுவிடுகின்றனர்.
இந்த கடைகள் இரவும் பகலும் திறந்தே இருக்கின்றன. ஆச்சரியப்படும் விதமாக, கடந்த பல தசாப்தங்களாக இந்த கடைகளிலிருந்து எந்தவொரு பொருளும் மாயமானதோ அல்லது பணம் திருடப்பட்டதோ இல்லை. சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் பொருளின் விலையை விடக் கூடுதல் பணத்தைக் கூட வைத்துவிட்டுச் செல்வது உண்டு. கால மாற்றத்திற்கு ஏற்ப இந்த பழமையான பாரம்பரியத்தில் டிஜிட்டல் முறையும் இணைந்துள்ளது. முன்பு மக்கள் பணத்தை மட்டுமே பெட்டியில் போட்ட நிலையில், தற்போது பல இடங்களில் ஆன்லைன் பரிவர்த்தனைக்காக QR கோடு ஸ்கேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. பணப் பரிவர்த்தனை முறை மாறினாலும், சமூக நம்பிக்கையின் இந்த அழகான பாரம்பரியம் இன்றுவரை வலுவாகத் தொடர்ந்து வருகிறது.
