CINEMA
69 படத்துல ஒரு நல்ல படம் இருக்கா…?சினிமா கவர்ச்சி மட்டும்தான் காரணமா…அன்று கத்தியைப் பாராட்டினார், இன்று கத்தியால் குத்துகிறார்… சீமானின் இரட்டை நிலையைத் தோலுரிக்கும் நெட்டிசன்கள்…!
தமிழக முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அவரது ஆட்சி மற்றும் செயல்பாடுகள் குறித்த அரசியல் விமர்சனங்கள் களம் காணத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், தேனிசை செல்லப்பாவின் புகழ் வணக்கக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதலமைச்சர் விஜய்யை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற பின், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ததைச் சுட்டிக்காட்டிய சீமான், இது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் மற்றும் ஜனநாயகத்தில் மற்றொருவருக்கான வாய்ப்பைப் பறிக்கும் ‘மக்கள் விரோதச் செயல்’ என்று சாடினார்.
தொடர்ந்து விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய சீமான், நெல்சன் மண்டேலா போல் மக்களுக்காகச் சிறை சென்றோ அல்லது நடிகர் சல்மான் கான் போல் தனது வருமானத்தில் பாதியை ஏழைகளுக்குச் செலவிட்டோ விஜய் இந்த இடத்திற்கு வரவில்லை என்றும், வெறும் ‘சினிமா கவர்ச்சி’ மட்டுமே அவரை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார். மேலும், விஜய் நடித்த 69 திரைப்படங்களில் சமூகத்திற்குப் பயன்தரும் ஒரு நல்ல படம் கூட இல்லை என்று குறிப்பிட்ட அவர், எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் போன்றோரின் திரைப்பயணத்தோடு ஒப்பிட்டு, “திரைப்படங்களிலேயே ஒரு நல்ல கருத்தைச் சொல்லாதவர் எப்படி நல்லாட்சி தருவார் என்று மக்கள் நம்பினார்கள்?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
சீமானின் இந்த அதிரடிப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, முதலமைச்சர் விஜய்யை அவர் ஒருமையில் விமர்சித்துப் பேசியதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அதே வேளையில், கடந்த காலங்களில் விஜய்யின் கத்தி, மெர்சல், சர்கார் போன்ற திரைப்படங்களைச் சீமான் மேடைகளில் பாராட்டிப் பேசிய பழைய வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், “அன்று பாராட்டிவிட்டு இன்று தரம் தாழ்த்திப் பேசுவது ஏன்?” என்று சீமானுக்கு எதிராகத் தங்களின் கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
