துக்க வீட்டில் வியூஸ் வெறி பிடித்த கேமராமேன்கள்…அசிங்கமா இல்ல உங்களுக்கு…பாரதிராஜாவின் கடைசி ஆசை… இன்று பண்ணை வீட்டில் அடக்கம்…தியாகராஜன் குமாரராஜாவின் தில்லான செயலுக்கு குவியும் பாராட்டு…! – cinefeeds
Connect with us

CINEMA

துக்க வீட்டில் வியூஸ் வெறி பிடித்த கேமராமேன்கள்…அசிங்கமா இல்ல உங்களுக்கு…பாரதிராஜாவின் கடைசி ஆசை… இன்று பண்ணை வீட்டில் அடக்கம்…தியாகராஜன் குமாரராஜாவின் தில்லான செயலுக்கு குவியும் பாராட்டு…!

Published

on

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் இறுதி ஆசையை நிறைவேற்றும் வகையில், வத்தலகுண்டு தேவதானப்பட்டி அருகே காட் ரோடு பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று உடல் அடக்கம் செய்யப்படுகிறது. தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த படைப்பாளியாகவும், பிற்காலத்தில் பிஸியான குணசித்திர நடிகராகவும் முத்திரை பதித்த பாரதிராஜா, கடந்த ஆண்டு தனது மகன் மனோஜை இழந்த துயரத்தால் கடும் மனச்சோர்வுக்கு ஆளானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (ஜூன் 10) சிகிச்சை பலனின்றி தனது 84-வது வயதில் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், சென்னை நீலாங்கரை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களும், ரசிகர்களும் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையில், சென்னையில் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரபல இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா செய்த செயல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, நெட்டிசன்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. துக்க வீடுகளில் செய்தி சேகரிப்பு என்ற பெயரில் ஊடகங்கள் எல்லை மீறுவதை அண்மைக்காலமாகப் பலரும் விமர்சித்து வரும் நிலையில், அதற்குச் சாட்டையடி கொடுப்பது போல தியாகராஜன் குமாரராஜாவின் எதிர்வினை அமைந்திருந்தது. அஞ்சலி செலுத்தும் இடத்தில் உணர்வுகளை மதிக்காமல் கேமராவைத் தூக்கிக்கொண்டு நின்ற ஊடகவியலாளர் ஒருவரைப் பார்த்ததும் கோபமடைந்த அவர், “என்னய்யா இது.. அசிங்கமா இல்ல உங்களுக்கு?” என்று முகத்திற்கு நேராகக் கேட்டுவிட்டுக் கடந்து சென்றார்.

Advertisement

இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், திரையுலகினரும் ரசிகர்களும் தியாகராஜன் குமாரராஜாவின் துணிச்சலான செயலை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். “துக்க வீட்டில் கூட வியூஸ் (Views) மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கேமராவைத் தூக்கிக்கொண்டு அலையும் சில ஊடகங்களுக்கு இந்த மாதிரியான நெத்தியடி ட்ரீட்மென்ட்தான் மிகச்சரியானது” என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு மரண வீட்டின் மாண்பையும், அங்குள்ளவர்களின் தனிப்பட்ட சோகத்தையும் மதிக்காமல் அத்துமீறும் டிஜிட்டல் மீடியாக்களுக்கு, தியாகராஜன் குமாரராஜாவின் இந்தக் கண்டனம் ஒரு முக்கிய பாடமாக அமைந்துள்ளது என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in