CINEMA
“வார்த்தைகளே இல்லை…”அரசியல் மாஸ் வளர்ச்சி…மாநில முதலமைச்சர் ஆனாலும் மாறாத குணம்…விஜய்-சினேகா சந்திப்பின் பின்னணியில் இருக்கும் நெகிழ்ச்சி கதை…!
தமிழக திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான சினேகா மற்றும் பிரசன்னா, தங்களது பிள்ளைகளுடன் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘கோட்’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்திருந்த நிலையில், தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்யை அவர்கள் குடும்பத்துடன் சந்தித்துள்ளனர். இந்த நெகிழ்ச்சியான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
விஜய் மற்றும் சினேகா கூட்டணியில் வெளியான ‘வசீகரா’ திரைப்படம் இன்றளவும் ரசிகர்களின் ஆல்-டைம் ஃபேவரிட் படங்களில் ஒன்றாக உலா வருகிறது. அப்படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தடவை சொல்வாயா’ பாடல் தொடங்கி, இருவரின் எதார்த்தமான காமெடி நடிப்பு வரை அனைத்தும் மாஸ் ஹிட் அடித்தன. அதனைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கோட்’ திரைப்படத்தில் மீண்டும் இணைந்து நடித்த இந்த ஜோடியை திரையில் பார்த்து ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
முதலமைச்சருடனான இந்த சந்திப்பு குறித்து சினேகா தனது பதிவில், “விஜய் சாருடன் இரு படங்களில் பணியாற்றியுள்ள நிலையில், இன்று அவரை ‘முதல்வர் ஜோசப் விஜய்’ என்ற புதிய அந்தஸ்தில் காண்பது மிகுந்த நெகிழ்ச்சியைத் தருகிறது; சில தருணங்கள் நம்மை வார்த்தையற்றுப் போகச் செய்துவிடுகின்றன” என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக உயர்ந்த பின்பும், தன்னை சந்திக்க வந்த சக கலைஞரின் குழந்தைகளான விஹான் மற்றும் ஆத்யந்தாவை பாசத்தோடு அணைத்து, தனது வழக்கமான எளிமையோடும் பண்போடும் விஜய் காட்சியளித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
