CINEMA
திரையுலகை உலுக்கிய மரணம்…பாரதிராஜா உடலுக்கு ‘புலிக்கொடி’ போர்த்திய சீமான்…இறுதிச்சடங்கில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்… பாரதிராஜாவிற்கு சீமான் கொடுத்த ‘பாச முத்தம்’…பாரதிராஜா மறைவால் நிலைகுலைந்து போன சீமான்…!
தமிழ் திரையுலகில் கிராமத்து மண்ணின் வாசனையையும், தமிழர்களின் சுயமரியாதையையும் தனது திரைப்படங்கள் வழியாக உலகறியச் செய்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் மறைவு, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். கலை உலகைத்தாண்டி தமிழ் தேசியப் பற்றும், ஈழத்தமிழர் உரிமைகள் மீதான தார்மீகக் குரலும் கொண்ட ஒரு பெருங்கலைஞனாக வாழ்ந்த அவரது மறைவுச் செய்தி கேட்டு ஒட்டுமொத்த தமிழகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. திரையுலகினரும், அரசியல் தலைவர்களும், லட்சக்கணக்கான ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வரும் வேளையில், அவரது இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமான் முன்னின்று அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
பாரதிராஜாவுக்கும் சீமானுக்கும் இடையேயான பந்தம் என்பது வெறும் திரைத்துறை நட்பு மட்டுமல்லாமல், கொள்கை ரீதியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பிணைக்கப்பட்ட ஒரு தந்தை-மகன் உறவாகும். தமிழ்நாட்டு உரிமைப் போராட்டங்கள் மற்றும் ஈழத்தமிழர் விவகாரங்களில் சீமானுக்குப் பெருந்துணையாகவும், வழிகாட்டியாகவும் பாரதிராஜா விளங்கியுள்ளார். அந்தப் பாசப்பிணைப்பின் வெளிப்பாடாக, பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சீமான், தனது தார்மீக பலமாக நின்ற ஆசானின் முகத்தைப் பார்த்ததும் நிலைகுலைந்து, கண்ணீர் மல்க மலர்மாலை அணிவித்து உணர்ச்சிப் பெருக்குடன் அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் தேசிய அரசியலின் மீது பாரதிராஜா கொண்டிருந்த தீராப்பற்றைக் கௌரவிக்கும் விதமாக, அவரது பூதவுடலுக்கு சீமான் ‘புலிக்கொடி’ போர்த்தி, முஷ்டி உயர்த்தி கம்பீரமாக வீரவணக்கம் செலுத்தினார். அதன்பின், உணர்ச்சிகளை அடக்க முடியாமல் பாரதிராஜாவின் உடலுக்குப் பாசமுத்தம் கொடுத்து நெகிழ்ந்த சீமான், இதுகுறித்த வீடியோவை தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து, “இயக்குநர் இமயம் எங்கள் அப்பா பாசத்திற்குரிய பாரதிராஜா அவர்களுக்கு வீரவணக்கம்!” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். திரையிலும் நிஜ வாழ்விலும் தமிழினத்திற்காக ஓங்கி ஒலித்த அந்த சிங்கக்குரல், சீமான் போன்ற தம்பிகளின் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
