CINEMA
தமிழக அரசியலில் புயலைக் கிளப்பிய ‘அந்த’ ஒரு புகைப்படம்…முகமூடி அணிந்த ஆண்கள்… தனித்து விடப்படும் பெண்கள்…அமைச்சர் சந்திப்பால் கொதித்தெழுந்த சின்மயி…பாடகர் வேடன் விவகாரத்தில் சின்மயி போட்ட வெடிகுண்டு பதிவு…!
தமிழ்நாடு பள்ளிக்கல்வி மற்றும் திரைப்படத்துறை அமைச்சர் ராஜ் மோகனை, பிரபல மலையாள ராப் பாடகர் வேடன் (Vedan) நேரில் சந்தித்துப் பேசினார். இது தொடர்பான புகைப்படத்தை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதை அடுத்து, இச்சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாடகி சின்மயி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் மிகவும் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஆண்களுக்கு, முந்தைய அரசுகளைப் போல தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசும், அமைச்சர் ராஜ் மோகனும் மேடை அமைத்துக் கொடுத்துவிடக் கூடாது என்று நம்புவதாக சின்மயி தனது பதிவில் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த கொரோனா காலகட்டத்தின் போது கோவிந்த் வசந்தா, முஹ்சின் பராரி, வேடன் மற்றும் சின்மயி ஆகியோர் இணைந்து ஒரு பாடலை உருவாக்கத் திட்டமிட்டிருந்தனர். அப்போது நடந்த ஒரு கிளப்ஹவுஸ் விவாதத்தில், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய வேடன் உடன் எப்படி இணைந்து பணியாற்றலாம் என்று பெண் ஒருவர் கேள்வி எழுப்பிய பிறகே, சின்மயிக்கு இத்தகவல் தெரியவந்துள்ளது. அதன் பின்னர், தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு வேடன் மன்னிப்பு அறிக்கை வெளியிட்டார். இதன் காரணமாக அந்தப் பாடல் திட்டம் முற்றிலும் கைவிடப்பட்டதோடு, வேடன் பங்கேற்கவிருந்த பல இசை நிகழ்ச்சிகளையும் சின்மயி நிராகரித்தார். இதனால் தனக்குப் பல வாய்ப்புகளும், பெரும் பொருளாதார இழப்புகளும் ஏற்பட்ட போதிலும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் தன்மானத்திற்காக இந்த முடிவில் தான் உறுதியாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக செயல்பாடுகளை ஒரு முகமூடியாகப் பயன்படுத்திக்கொண்டு, பெண்களின் ஒப்புதல் இன்றி எல்லையை மீறும் ஆண்களின் செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சின்மயி சாடியுள்ளார். ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக தங்களைக் காட்டிக்கொள்ளும் இதுபோன்ற சில ஆண்கள், வெளியில் ஒரு ‘ஹீரோ’வாகவும் ‘தலைவர்’களாகவும் சித்தரிக்கப்படுவதால், அவர்களுக்கு எதிராகக் குரல் எழுப்பும் பெண்களுக்குச் சமூகத்தில் எந்த ஆதரவும் கிடைப்பதில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். சமூகத்தின் பொது நன்மைக்காகப் பெண்கள் இவர்களின் அத்துமீறல்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதை இனிமேலும் அனுமதிக்க முடியாது என்றும், “இதுவே முடிவு” என்றும் சின்மயி பதிவிட்டுள்ள கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
