CINEMA
கமல் சப்பாணி, ரஜினி பரட்டை…சின்னசாமி எப்படி ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவாக மாறினார்?…பத்மஸ்ரீ முதல் 6 தேசிய விருதுகள் வரை… விருதுகளுக்கே பெருமை சேர்த்த பாரதிராஜாவின் சாதனைப் பக்கங்கள்…!
தமிழ் சினிமாவை நான்கு சுவர்களுக்குள்ளும், செயற்கை ஸ்டுடியோ செட்களுக்குள்ளும் முடங்கிக் கிடக்க விடாமல், கேமராவைத் தூக்கிக்கொண்டு கிராமத்து வயல்வெளிகளுக்கும், ஆலமரத்து நிழல்களுக்கும் கூட்டிச் சென்ற ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா (84) இன்று காலை காலமானார். தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் சின்னசாமி என்ற இயற்பெயருடன் பிறந்து, சினிமா மோகத்தால் சென்னை வந்து பல முன்னணி இயக்குநர்களிடம் சினிமா நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டவர். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி சென்னை நீலாங்கரை இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. “என் இனிய தமிழ் மக்களே” என்று காந்தக் குரலில் கம்பீரமாக ஒலித்த தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தம் இன்றுடன் ஓய்ந்தது ஒட்டுமொத்தத் திரையுலகையும், ரசிகர்களையும் பேராழ்த் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
1977ஆம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு பிரம்மாண்ட புரட்சியை நிகழ்த்தித் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கினார் பாரதிராஜா. சாக்லேட் பாயாக இருந்த கமல்ஹாசனை மொட்டையடித்து ‘சப்பாணி’ ஆக்கியதும், ரஜினிகாந்த்தை ‘பரட்டை’ என்ற மிரட்டலான வில்லனாக மாற்றியதும் இவரது அசாத்திய இயக்கத்திற்குச் சான்றாகும். அதனைத் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், மண்வாசனை, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை என இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் காலத்தால் அழியாத காவியங்களாக மாறின. கிராமத்து எதார்த்தம், சுண்டி இழுக்கும் மண்வாசனை மற்றும் இளையராஜாவின் இசை என இவர்களது கூட்டணி தமிழ் சினிமாவின் பொற்காலமாக அமைந்தது.
ஒரு சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, ராதிகா, ராதா, ரேவதி, கார்த்திக், பாக்யராஜ், மணிவண்ணன், பாண்டியன் எனப் பிற்காலத்தில் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த எண்ணற்ற நட்சத்திரங்களை உருவாக்கிய பல்கலைக்கழகமாகவும் பாரதிராஜா திகழ்ந்தார். இவரது அசாத்திய கலைச் சேவைக்காக இந்திய அரசின் ‘பத்மஸ்ரீ’ விருது, 6 தேசிய விருதுகள், தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது எனப் பல உயரிய விருதுகளை வென்று குவித்தார். பிற்காலத்தில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் முத்திரை பதித்த இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மகன் மனோஜின் திடீர் மறைவால் மனதளவிலும் உடலளவிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். அந்தத் தீரா சோகத்தின் வடுக்களோடு இன்று மறைந்துள்ள இயக்குநர் இமயத்தின் பங்களிப்பு தமிழ் சினிமா உள்ளவரை மக்கள் மனதில் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும்.
