CINEMA
ரிகர்சல் செய்ய மறுத்த அமலா பால்…டீ ஆற்ற ரிகர்சலா?…ஷூட்டிங் ஸ்பாட்டில் சண்டையிட்டு வெளியேறிய அமலா பால்… ‘வாகை சூட வா’ பட செட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் கேரள வரவான நடிகை அமலா பால். ‘சிந்து சமவெளி’ என்ற சர்ச்சைக்குரிய படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் ‘மைனா’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தொடர்ந்து விஜய், தனுஷ், ஆர்யா எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து பிஸியாக நடித்து வந்த அவர், இயக்குநர் ஏ.எல்.விஜய்யைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த உறவு சில ஆண்டுகளிலேயே விவாகரத்தில் முடிய, சில காலத்திற்குப் பிறகு ஜகத் தேசாய் என்பவரை மறுமணம் செய்து கொண்டு, தற்போது ஒரு ஆண் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், ‘களவாணி’ பட புகழ் இயக்குநர் சற்குணம் சமீபத்திய பேட்டி ஒன்றில் அமலா பால் குறித்துப் பகிர்ந்துள்ள தகவல் இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்குப் பேட்டியளித்த இயக்குநர் சற்குணம், தனது திரைப்பயணம் மற்றும் தன் படங்களில் நடித்த நாயகிகள் குறித்துப் பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். நடிகைகள் ஓவியா மற்றும் இனியா ஆகியோரின் அசல் பெயர்களை மாற்றி, அவர்களுக்கு சினிமாவுக்கான அழகிய பெயர்களைச் சூட்டியதே தான் தான் என்று குறிப்பிட்ட அவர், தேசிய விருது பெற்ற தனது ‘வாகை சூட வா’ திரைப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க கமிட்டானது அமலா பால் தான் என்ற அதிரடி உண்மையையும் உடைத்துள்ளார். ‘மைனா’ படத்திற்குப் பிறகு நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வந்த அமலா பால், இப்படத்தின் கதையைப் பிடித்துப் போய் தான் ஒப்பந்தமாகியிருந்தார்.
இருப்பினும், படப்பிடிப்புத் தொடங்குவதற்கு முன்பாக நடந்த ஒரு சிறிய ரிகர்சல் (ஒத்திகை) விவகாரமே அமலா பால் அந்தப் படத்திலிருந்து வெளியேறக் காரணமாக அமைந்துள்ளது. இதுகுறித்து விளக்கிய சற்குணம், “வாகை சூட வா திரைப்படத்தில் கதாநாயகி டீ ஆற்றும் ஒரு முக்கியக் காட்சி வரும்; அந்தக் காட்சி மிக இயல்பாக வரவேண்டும் என்பதற்காக அமலா பாலை நன்றாக டீ ஆற்றிப் பழக வேண்டும், அதற்கு ஒத்திகை அவசியம் என கூறினேன். ஆனால் அவரோ, ‘டீ ஆற்றுவதற்கு எல்லாம் ரிகர்சலா?’ எனக் கேட்டு ஒத்திகை செய்ய மறுத்துவிட்டார். நான் அந்த ஒத்திகையைச் செய்வதில் உறுதியாக இருந்ததால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் அந்தப் படத்திலிருந்து வெளியேறிவிட்டார்” என்று தெரிவித்துள்ளார். அதன் பின்னரே அந்த வாய்ப்பு நடிகை இனியாவுக்குச் சென்று, படம் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
