LATEST NEWS
“அரசியல் பரபரப்புக்கு நடுவே குடும்பத்தோடு இருமுடி கட்டிய அன்புமணி ராமதாஸ்…2024-ல் தோல்வி… 2026-ல் மாஸ் வெற்றி! சௌமியா அன்புமணியின் சபரிமலை யாத்திரைக்கு பின்னால் இருக்கும் ரகசியம்…!
தமிழக அரசியலின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ், தனது அரசியல் பணிகளுக்கு இடையே ஆன்மிகத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அந்த வகையில், இந்த ஆண்டு அவர் தனது குடும்பத்தினருடன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார். அவருடன் அவரது மனைவி சௌமியா அன்புமணி, பேரன் மற்றும் பேத்திகள் என ஒட்டுமொத்த குடும்பமும் இணைந்து இருமுடி கட்டி சபரிமலையில் மனமுருகி சாமி தரிசனம் செய்துள்ளது அரசியல் மற்றும் ஆன்மிக வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
சபரிமலை யாத்திரையின் மரபுப்படி 41 நாட்கள் கடுமையான விரத முறைகளைப் பின்பற்ற வேண்டியிருப்பதால், அன்புமணி ராமதாஸ் கடந்த வாரம் தனது விரதத்தைத் தொடங்கினார். சென்னை உத்தண்டியில் உள்ள விநாயகர் கோவிலுக்குக் குடும்பத்துடன் சென்ற அவர், அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தி குருசாமியின் முன்னிலையில் மாலை அணிந்து கொண்டார். அவருடன் அவரது பேரன், பேத்திகளும் மாலை அணிந்து விரதத்தைக் கடைப்பிடித்தனர். விரதக் காலம் நிறைவடைந்ததை அடுத்து, சென்னை மகாபலிபுரம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் பாரம்பரிய முறைப்படி இருமுடி கட்டிக்கொண்டு, ஐயப்ப யாத்திரையின் முக்கிய அங்கமாகக் கருதப்படும் கரடுமுரடான காட்டுப்பாதை வழியாக நடந்தே சென்று அவர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இந்த யாத்திரையில் அன்புமணி ராமதாஸின் மனைவியும், தர்மபுரி சட்டமன்ற உறுப்பினருமான சௌமியா அன்புமணியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் கடந்த ஆண்டு முதன்முறையாகச் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனைத் தரிசித்தார். அதனைத் தொடர்ந்து, நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் அதே தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டுப் பெருவெற்றி பெற்றுள்ள சௌமியா அன்புமணி, தற்போது இரண்டாவது முறையாகத் தன் கணவர் மற்றும் பேரக்குழந்தைகளுடன் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனுக்குத் தனது நன்றியைச் செலுத்தியுள்ளார்.
