CINEMA
6 மாத ட்ரையல் பீரியட்… அதுக்குள்ள இத்தனை உயிரிழப்பா?…Show காட்டும் அரசியலை நிறுத்துங்க…கும்மிடிப்பூண்டி சிறுமி விவகாரத்தில் காவல்துறை கொடுத்த அதிரடி விளக்கம்…இபிஎஸ், அன்புமணி குற்றச்சாட்டின் உண்மை என்ன?…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை அருகே வட மாநிலக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்றரை வயது பெண் குழந்தை, கஞ்சா போதையில் இருந்த 4 வட மாநிலத் தொழிலாளர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்டதாக வெளியான செய்தி தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அக்குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தது. இச்சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். அதேநேரத்தில், இச்சம்பவத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை எதுவும் நிகழவில்லை எனத் தமிழகக் காவல்துறை தரப்பில் தற்போதைய நிலவரப்படி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்கொடூர சம்பவம் குறித்துத் தனது எக்ஸ் (X) பக்கத்தில் கொந்தளித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு? என்னதான் செய்கிறது காவல்துறை? முதலமைச்சர் விஜய்யின் ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ எங்கே போனது?” என அதிரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “இன்னும் எத்தனை பெண்கள் உங்களுடைய 6 மாத Trial Period முடியும் வரை பாதுகாப்பை இழக்க வேண்டும்? ‘அதிகாரிகளை நியமித்துவிட்டேன், எல்லாம் மாறிவிடும்’ என்று டயலாக் பேசிய முதல்வரே… இதுதான் அந்த மாற்றமா?” என்று சாடிய அவர், இனியாவது ‘Show’ காட்டும் அரசியலை நிறுத்திவிட்டு, சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றும் தமிழக வெற்றிக் கழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு இதே கும்மிடிப்பூண்டி அருகே பள்ளிச் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்த அவர், அப்போதே விழித்துக்கொண்டு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தத் தவறியதே தற்போதைய காவல் துறையின் தோல்விக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார். கஞ்சா போதையின் உச்சத்தில் பால்மனம் மாறாத குழந்தையைச் சீரழித்த இந்த 4 மனித மிருகங்களுக்கும் தூக்குத் தண்டனை பெற்றுத் தருவதை அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் அரசு மெத்தனமாக இருக்கக் கூடாது என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
